×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள்…

வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. கோடை வெயில் ஒருபுறம்…. தேர்தல் பிரச்சார அனல்பரப்பும் உரைகள் ஒரு புறம்…நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கடும்பிரச்சாரத்தில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பாக பிரதான கட்சிகளான திமுக- அதிமுக களத்தில் இறங்கியுள்ளன. ஒன்றியத்தில் ஆளும் பாஜக எப்படியாவது தமிழ்நாட்டில் பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பல விஷயங்களை தூசிதட்டி திரும்பவும் தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறது. ஆனால் அந்தகட்சிக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்குமா என்பது தேர்தலுக்கு பிறகு தெரிய வரும்.

அதன்தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்பான விஷயங்களிலும் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தவறான தகவல்களை கூறிவருவதாகவும், அதற்காக சில சங்கங்களையும் பயன்படுத்தி வருவதையும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து தேர்தல்களிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்கு கணிசமானது என்பதை உணர்ந்துள்ள கட்சியினர் பலர் அவர்களை தங்களை நோக்கி இழுக்கவும் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வூதியதர்களின் வாக்குகள் யாருக்கு செல்லப் போகின்றன என்று விவாதமும் தற்போது நடைபெற்று வருகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியரின் பல்வேறு கோரிக்கைகள் கடந்த காலங்களில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டு வந்தது என்பது வரலாறு. கடந்த காலத் தேர்தல்களில் திமுகவின் வெற்றியில் அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பங்கு இருந்தது என்பதை யாரும் புறந்தள்ளி விட முடியாது அந்த அளவுக்கு அரசு ஊழியர் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதிலும் அதற்கு பதில் வினையாக அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி அமைய அரும்பாடு படுவதும் வாடிக்கையான நிகழ்வு. இந்நிலையில் 19ம் தேதி நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் வாக்குகள் யாருக்கு செல்லப் போகிறது என்பதே இப்போதயை எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா தமிழக தலைவர் அண்ணாமலை பழைய ஓய்வூதிய திட்டம் என்பது சாத்தியம் இல்லாத விஷயம்; பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தவே முடியாது என்று சொன்னதுக்கு பிறகு பழைய ஓய்வூதி திட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இவர் மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றாமல் குறிப்பாக அரசு ஊழியர் ஆசிரியர் நடத்திய எந்தவித போராட்டங்களுக்கும் செவி சாய்க்காமல் அழைத்து கூட பேசாமல் ஆசிரியர் அரசு ஊழியர் இனங்களை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமியையும், அவர் ஆசிரியர்களுக்கு எதிராக அவர்கள் வாங்கும் ஊதியத்தை பற்றி கேலியும் கிண்டலுமாக பேசிய அந்த ஆடியோவையும் இன்றுவரை ஆசிரியர் அரசு ஊழியர்கள் மறக்க முடியாமல் வெறுப்பில் உள்ளனர். கடந்த கால ஆட்சியில் முடக்கப்பட்ட பல்வேறு சலுகைகள், சரண்டர் விடுப்பு, ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் நிறுத்திவைப்பு, அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு, இவையெல்லாம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டவை. அதிமுக ஆட்சியில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராடிய போது பக்கம் பக்கமாக ஆசிரியர் அரசு ஊழியர்கள் பெறக்கூடிய ஊதியத்தை ஊடகங்களில் விளம்பரமாக கொடுத்து அவர்களின் நெஞ்சில் குத்தியதையும் அவர்கள் எளிதில் இன்றளவிலும் மறக்கவில்லை. மேலும், கடந்த அதிமுக தேர்தல் அறிக்கையில் 2021ல் ஒரு வரி கூட ஆசிரியர் அரசு ஊழியர் என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தவில்லை. அதை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்று வரை மறந்து விடவில்லை.

இந்த சூழலில் கடந்த 2021ல் கடுமையான நிதி நெருக்கடியில் கொரோனாவின் இரண்டாம் அலையில் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எண்ணற்ற தேர்தல் வாக்குறுதிகளை அளித்து கடுமையான நிதி நெருக்கடியின் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் கடந்த கால அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை 14 சதவீதம் வழங்கி ஆணை பிறப்பித்தார். தமிழக அரசின் வரலாற்றில் ஒரே நேரத்தில் 14% அகவிலைப்படி அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வூதியதாரருக்கு வழங்கியது இதுவே முதல் முறை.

கடும் நிதி நெருக்கடி காரணமாக அகவிலைப்படி உயர்வு ஆறு மாதம் தள்ளி தள்ளி வழங்கிய சூழலில் பல்வேறு சங்கங்கள் நேரில் சென்று அவரை வலியுறுத்தியதன் அடிப்படையில் விரைவில் அது சரி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பின்னர் அதை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசுக்கு இணையான, மத்திய அரசு வழங்கும் அதே தேதியில் வழங்கிட உத்தரவிட்டார். பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு போராட்ட அறிவிப்புகளை அறிவிக்கும் பொழுதே மூன்று பேர் கொண்ட அமைச்சர்களை கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமல்லாமல் தானும் நேரில் அவர்களை அழைத்துப் பேசி இது உங்களுக்கான அரசு விரைவில் நிதிநிலைமையை சரி செய்து அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றுவேன் என்று நம்பிக்கையை ஊட்டி அவர்களை நேரில் மாண்போடு சந்தித்து அனுப்பி வருகிறார்.

கடந்த கால ஆட்சியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராடிய போது அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட அத்தனை பழிவாங்கும் நடவடிக்கைகளையும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ரத்து செய்தார். பேராட்ட காலத்தின் அத்தனை நாட்களையும் பணிக்காலமாக அறிவித்து அதற்குரிய ஊதியத்தையும் வழங்கினார். பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 12 மாதமாக உயர்த்தி வழங்கினார். அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் கருணைத்தொகையை ஐந்து லட்சமாக மாற்றி வழங்கினார். தற்போது கூட, அரசின் நிதிநிலை வெகு விரைவாக சீர் அடைந்து வருகிறது, சீரடைந்த உடன் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனைதும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார். தேர்தலில் தற்போது களம் காணுகிற அதிமுக ஒரு பக்கம் தான் ஆட்சி செய்த போது ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்றாமல் அவர்கள் ஊதாசீனப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஆசிரியர் அரசு ஊழியர் என்ற வார்த்தையே இல்லாமல் பார்த்துக்கொண்டது. இன்னொரு புறம், பாஜக தலைவர் அண்ணாமலை ஆசிரியர், அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வு ஊதிய திட்டம் சாத்தியமில்லை என்று ஆங்காங்கே நக்கல் அடித்து வருகிறார்.

இந்நிலையில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் நம்பிக்கொண்டிருக்கிற ஒரே வாய்ப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார். சொன்னதை செய்வார்கள்; சொன்னதை கடந்த காலங்களில் செய்து கொண்டிருக்கிறார்கள்; என்ற அடிப்படையில் தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர், அரசு ஊழியர், ஓய்வூதியதாரர் குடும்பங்களில் பெரும்பாலும் இருந்து வருகிறது. எனவே கடந்த காலங்களைப் போலவே தொடர்ந்தும் எப்பொழுதும் ஆசிரியர் அரசு ஊழியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலம் 10 ஆண்டுகள் நடந்த போதும், பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ெகாண்டு வந்து, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்தது அவர்கள் தான். ஆனால், கடந்த முறை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, தனது தேர்தல் பிரச்சாரத்தில், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை ஏன் திமுக கொண்டு வரவில்லை என்று கேட்டு வருகிறார். இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியில் இவர் என்ன செய்தார் என்று பொதுமக்களே அவரைப் பார்த்து கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதிமுக ஆதரவு சங்கத்தினர் சிலர் அதற்கு ஆதரவாக கேள்வி எழுப்புகின்றனர். அதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது. அப்போதுமவுனமாக இருந்தவர்கள் இப்போது பொதுவெளியில் பேசுவதும் நகைப்பதாக இருக்கிறது. அவர்களை வைத்துக் கொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாக்குகளை இந்த தேர்தலில் பெற்று விடலாம் என்றும் கணக்குப் போடுகின்றனர். தேர்தலில் இது எப்படி எதிரொலிக்கும் என்பது குறித்து பெரும்பான்மை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு ஊதியதாரர்கள் கூறும் கருத்துப்படி அவர்கள் திமுக பக்கம் இருப்பதாக தெரிகிறது. மேலும் காங்கிரஸ் ஆளுகின்ற மாநிலங்களில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண்டும் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். அதை தமிழ்நாட்டில் திமுக செய்யும் நம்பிக்கை உள்ளதாக ஆசிரியர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் சங்கங்கள் கூறும் கருத்துகள்:
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன்:
களத்தில் ஒரு பக்கம் எங்கள் போராட்டங்களை கண்டு கொள்ளாத, எங்களது கோரிக்கைகளைப் பற்றி பேசாத, எங்களை ஊதாசீனப்படுத்தி ஆடியோ வெளியிட்டு எங்கள் மனதை காயப்படுத்திய, எங்களது கோரிக்கைகளில் ஒன்றைக் கூட கடந்த தங்களின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்க்காத கட்சி ஒரு பக்கம், பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமே இல்லை என்று சொல்லி உலாவிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிற தேசிய கட்சி ஒரு பக்கம், 53000 தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி எங்களை மதித்து பல்வேறு தருணங்களில் அழைத்துப் பேசி ஒவ்வொன்றாக கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி வரும் கட்சி இன்னொரு பக்கம். குறிப்பாக தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடுமையான நிதி நெருக்கடியிலும் தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

அந்த வகையில் எங்களுக்கும் தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்ட பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த காலங்களில் சொன்னதை செய்திருக்கிறார்கள். அதை நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் எங்களின் எஞ்சிய கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழகத்தில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களை பொறுத்தவரை மெத்த படித்தவர்கள் நன்கு தெரிந்தவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவு உள்ளவர்கள். எங்களுக்கு எங்கள் கோரிக்கைகள் மட்டும் முக்கியமல்ல நாட்டின் நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் தெளிவாக வாக்களிப்பார்கள்.

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ்:
ஆசிரியர் அரசு ஊழியர்களை அரசியல் கட்சிகள். குழப்பும் வேலையில் இறங்கிவிட்டன. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்கை பெற அரசியல் கட்சிகள், சில பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.ஆசிரியர், அரசு ஊழியர் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நீக்கிவிட்டு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இந்தியாவிலேயே முந்திக் கொண்டு 2003 ல் கொண்டுவந்தது, ஊக்க ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தது, சரண்டரை நிறுத்தி வைத்தது,பத்தாண்டுகள் உரிமைக்காக போராடிய போது அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தது,பணி நீக்கம் போன்ற ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு விரோதமாக இருந்த முந்தைய ஆட்சியாளர்கள்,இன்று புதிய ஓய்வூதிய திட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேட்கின்றனர்.

பத்தாண்டு காலம் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையாத முந்தய ஆட்சியாளர்கள் இன்று பரிந்து பேசுகின்றனர். குறிப்பாக தேசிய கட்சிகூட பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர முடியாது என்று திட்டவட்டமாக மேடை தோறும் முழங்குகின்றனர்.இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய காலை உணவு திட்டம்,அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, நடுநிலைப் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு கணினி ஆய்வகம் ஸ்மார்ட் வகுப்பறை என சமூக நோக்கோடு கல்வி வளர்ச்சிக்கு,அடித்தட்டு மக்களின் வாழ்வாதார கல்வி மேம்பாட்டுக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் அரசின் செயல்பாடு ஒருபக்கம் இருப்பதையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் இல்லை.கோரிக்கையை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்ற அரசின் நிலைபாட்டில் எங்களுக்கு நம்பிக்கையும் இருக்கிறது. தேர்தலில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் தேச நலன் கருதி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குடும்பத்தோடு ஜனநாயக கடமையை ஆற்று வார்கள்.

The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள்… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...