டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அண்மையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 54 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான சோனியாகாந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் புதிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சோனியா காந்தி இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை துணை தலைவர் ஜெகதீப் தங்கர் அறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் சோனியாகாந்திக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கப்பட்டது. சோனியா காந்தி இந்தியில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை முன்னவர் பியூஷ் கோயல், மாநிலங்களவை துணை தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
சோனியா காந்தியை தவிர மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரும் இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இதை தவிர காங்., கட்சியை சேர்ந்த அஜய் மக்கான், சையத் நசீர் ஹுசைன் உள்ளிட்ட சுமார் 12 எம்.பி.க்கள் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டனர்.
இதனிடையே, புதிய அத்தியாயத்தை தொடங்கும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினராக 25 ஆண்டுகளை சோனியா காந்தி நிறைவுசெய்துள்ளார். நானும் சக மாநிலங்களவை உறுப்பினர்களும் சோனியா காந்தியின் வரவை எதிர்நோக்கியுள்ளோம் என்று கார்கே கூறியுள்ளார். இதுவரை ரேபரேலி தொகுதியில் மக்களவை தேர்தலில் மட்டுமே சோனியாகாந்தி போட்டியிட்டு வந்தார். முதல்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக சோனியாகாந்தி தேர்வானார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post புதிய அத்தியாயத்தை தொடங்கும் காங். மூத்த தலைவர் சோனியா காந்தி; மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார்..!! appeared first on Dinakaran.