×

சைவத்தைத் தழைக்கச் செய்த திருஞானசம்பந்தர்

நல்ல தொடர்புகள்தான் நம்மை நெறிப்படுத்தும். நாளும் உயர்த்தும்; நற்கதி நல்கும்; ‘சம்’ என்றால் நல்ல என்று பொருள்; ‘பந்தம்’ என்றால் தொடர்பு; ஞானத்துடன் நல்ல தொடர்புகொண்டதால் திருஞானசம்பந்தர் என்று போற்றப்பட்டவர்தான் ஆளுடைய பிள்ளையார்.தேவாரம் பாடிய மூவருள் முதல்வராக விளங்கும் இவர் சீர்காழியில் 7ஆம் நூற்றாண்டில் தி.பி. 601ஆம் ஆண்டு சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாக அவதரித்தார்.சைவம் தழைக்க வேண்டுமென்பதற்காக முருகப்பெருமானேதான் திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்பர். அதனால்தான் வடலூர் வள்ளற்பெருமான். தனக்குக் குருவாக ஏற்றுச் சைவம் தழைக்க இவர் வந்ததை

“சைவம் தழைக்கத் தழைத்தாண்டி ஞான
சம்பந்தன் பேர்கொண்டு அழைத்தாண்டி”

– என்று பாடுகிறார். இவருக்கு மூன்று வயதிருக்கும்போது ஒருநாள், தந்தையார் குளத்திற்கு நீராடச் செல்கிறார். ‘அப்போது நானும் வருகிறேன்’ என்று சொல்லி குளத்தங்கரைக்குச் செல்கிறார். அப்போது குளத்தில் மூழ்கி மந்திரம் சொல்லும் தந்தையாரை விட்டுவிட்டு, திருத்தோணிபுரம் விமானத்தைப் பார்த்து அழ, இறைவன் இறைவியுடன் வந்து ஞானப்பால் ஊட்டி மறைகிறார். நீராடிவிட்டு வந்த தந்தை, “யார் கொடுத்த பாலைக் குடித்தாய்” என்று கேட்க, குழந்தை….. “தோடுடைய செவியன்” என்று தொடங்கி தான் கண்ட காட்சிகளைப் பதிகமாகப் பாடுகிறார்.

இப்படித் தொடங்கிய இவரின் அருள்வாழ்வு தமிழுக்கும் தமிழிசைக்கும் பற்பல பலன்களை நல்கியது. தலயாத்திரையாகச் சம்பந்தர் திருக்கோலக்கா என்ற தலத்திற்குச் செல்லும்போது அவர் கையால் தாளம்போட்டுக்கொண்டு பாடுவதைக் கண்டு குழந்தையின் பிஞ்சுவிரல் தாளமிட்டால் தாங்காதே என்று கருதி பொற்றாளத்தைத் தர, அது தங்கமாதலால் அதில் ஓசை வரவில்லை. உடனே, அம்மை ஓசைகொடுத்தாள். காரணம், சைவசமயம் தமிழாலும் இசையாலும் தழைக்க வேண்டுமென்பதற்காக.

அந்த வகையில் திரு இருக்குக்குறள், திருவிராகம், திருமுக்கால், நாலடி மேல்வைப்பு, கூடற்சதுக்கம், ஈரடி, திருயமகம், மாலை மாற்று போன்ற புதிய யாப்புவகைப் பாடல்களைப் பாடி தமிழுக்கு அணிசெய்தார். இப்படித் தமிழின்மீது தாழாத பற்றுக்கொண்டு பல தொண்டுகள் செய்ததால் இவர் தன்னை, ‘தமிழ்ஞானசம்பந்தன்’ என்று தனக்குதானே ‘தமிழ்’ என்ற பட்டத்தைக் கொடுத்துப் பாடிக்கொண்டார். சாதி வேற்றுமைகளைத் தாண்டி நிற்பதுதான் சைவசமயம் என்பதைக் காட்ட, தாழ்ந்த குலத்தில் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் நட்புப் பாராட்டி, அவர் யாழிசைக்க இவர் பாவிசைத்தார். பாணரின் ‘யாழிசையால்தான் சம்பந்தர் பாடு கிறார்’ என்று சிலர் கருதி, பாணரே ‘யாழில் வாசிக்கவியலாத வகையில் பதிகம் பாடுங்கள்’ என்றார்.

அப்போதுதான் “யாழ்மூரி” என்ற பண்ணில் “மாதர் மடப்பிடி” என்று தொடங்கும் பதிகத்தைப் பாடியருளினார். இதற்குமுன் இந்தப்பண் சிலப்பதிகாரத்தில் கானல்வரியிலே மட்டும் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பழமையைப் புதுமையாக்கிய புதுமலரான சம்பந்தர், பல புதுமையான சமுதாயப் புரட்சிகளைச் செய்துள்ளார். பழங்காலத்தில் சாதிக் கொடுமைகளால் சகலரும் சமமாக நீராடமுடியாது. அதை உடைத்து அனைவரும் சமம் என்பதை நிலைநாட்ட திருக்கோயில் திருக்குளத்தில் அனைவரும் நீராடுங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்.

………………. வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே”
என்று பாடுகிறார்.

இதுமட்டுமா? தமிழ்ப்பண்ணிசையால் திருச்செங்கோட்டில் வெப்புநோயைப் போக்கி, வீழிமிழலையில் படிக்காசு பெற்று, பஞ்சம்போக்கி, மறைக்காட்டில் திருக்கதவம் மூடி, மதுரையில் கூன்பாண்டியனை ‘திருநீற்றுப்பதிகம் பாடி’ நின்றசீர் நெடுமாறனாக மாற்றி, அதன்மூலம் பாண்டிய நாட்டைச் சைவமாக மாற்றி சாதனைகள் பலவற்றைச் செய்தார். நம் வாழ்வில் வரும் பல சோதனைகளும் நவகிரகங்களால்தான் வருகின்றன. அந்த நவகிரகங்களே தெய்வத்தமிழ் பாடினால் தீங்கு செய்யாமல் நன்மையே செய்யும் என்பதைக் காட்ட, “கோள்களை அறுக்கும் கோளறு பதிகம்” பாடியருளினார்.

வீரத்தமிழ்மொழியால் பாம்பின் விஷத்தையும் முறியடிக்க முடியும் என்பதைக் காட்டினார் நம் தமிழ்விரகர். திருமருகலில் ஒரு பெண் அவளின் தாய்மாமனுடன் திருமணம் செய்துகொள்வதற்காக வந்துவிடுகிறாள். அப்போது, அந்த ஆண்மகனைப் பாம்பு தீண்டி இறந்துவிடுகிறான். அதனால் அந்தப்பெண் துயரம் தாங்காமல் அழுகிறாள். அவன் சடலத்தைத் தொடாமல் அழுகிறாள். காரணம் இருவருக்கும் திருமணம் அதுவரை நடக்கவில்லை.

இதையறிந்த சம்பந்தர், வீறு மிகுந்த வித்தகப்பதிகம் பாடி, பாம்பின் விஷத்தை முறித்து அந்த ஆடவனை எழுப்புகிறார். இத்துடன் ஞானசம்பந்தருக்கெனவே மயிலாப்பூரில் சிவநேசஞ்செட்டியார் வளர்த்த பூம்பாவை எனும் பெண் இறந்துவிட, அந்தப்பெண்ணை எரித்த சாம்பற்குடத்தை ஞானசம்பந்தரின் திருமுன் வைத்து வேண்ட, ‘மட்டிட்ட புன்னை’ என்று தொடங்கும் பதிகம் பாடுகிறார்.

பத்தாவது மாதத்தில் பெண்களின் பனிநீர்க்குடம் உடைந்து குழந்தை பிறப்பதுபோல, பதிகத்தின் பத்தாவது பாடல் பாடும்போது சாம்பற்குடமுடைந்து அழகே உருவாகப் பூம்பாவை வருகிறாள். அப்போது பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என வேண்டுகிறார் சிவநேசர். திருமணம் செய்துகொண்டால் எந்தத் தவறுமில்லை. காரணம், அவள் இவருக்கென்றே வளர்க்கப்பட்டவள். ஆனால், சம்பந்தரோ, ‘உங்கள் பெண் என்றோ இறந்துவிட்டாள், இவள் நான் தமிழ்பாடி எழுப்பிய என்மகள், அவளை எப்படித் திருமணம் செய்துகொள்ள முடியும்?’ என்று கேட்டார்.

திருமருகலில் அந்தப்பெண், தனக்குக் கணவனாக வரப்போகிறவன் இறந்தவுடன் உடலைத் தொடாமல் அழுகிறாள். காரணம், திருமணம் நடக்கவில்லை என்பதால் இது பெண்ணின் கற்பு. அதுபோலத் தமிழால் தான் பெற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்றுகூறி ஆணுக்கும் கற்பு உண்டு என்பதை எடுத்துக்காட்டி,

“கற்புநெறி என்று பேசவந்தால் – அதை
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்”

என்று பாரதியார் பாடுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புரட்சி செய்தவர்தான் திருஞானசம்பந்தர். காரைக்காலம்மையாரை அடியொற்றி, தான் பாடும் பதிகத்தின் நிறைவுப்பாடலில் தனது பெயரைப் பதிவுசெய்து தன் முத்திரை படைத்த திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களுக்குள் நமக்கு மொத்தம் கிடைத்திருப்பவை 4158 பாடல்கள்தான். இதில் மொத்தம் 24 பண்கள் இடம்பெற்றுள்ளதால் அவை முதல் மூன்று திருமுறைகளாக இலங்குகின்றன.

ஆனால் இவர் பாடியவை மொத்தம் 16,000 பாடல்கள். இந்தப் பண்தமிழ்ப் பணியைப் பாராட்டவே இறைவன் நெல்வாயில் அறத்துறையில் முத்துப் பல்லக்கும், பட்டீச்சரத்தில் முத்துப் பந்தலும், திருவாவடுதுறையில் பொற்கிழியும் தந்து ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இறைவனையும் இயற்கையையும் இவர் பாடும் திறத்தை வியந்துதான் அருணகிரிநாதர்,

“புமியதனில் பிரபுவான புகலியின் வித்தகர்போலே
அமிர்தகவி தொடைபாட அடிமை தனக்கு அருள்வாயே”

என்று சம்பந்தரைப் போலத் தானும் திருப்புகழ் பாடவேண்டும் என முருகனை வேண்டுகிறார்.தி.பி. 617 ஆம் ஆண்டு திருமண நல்லூரில் இறைச் சோதியில் கலந்த இவர் 16 வயது வாழ்ந்திருந்தாலும் செய்த அருட்சாதனைகள் ஏராளம். ஏன்? நாவுக்கரசருக்கே ‘அப்பர்’ என்று பட்டம் வழங்கியவர் ஆளுடைய பிள்ளையாரோ, தன்னைவிட பல ஆண்டுகள் மூத்த நாவுக்கரசருக்கே பட்டம் வழங்கினார் எனில், நம்மையும் மேலேற்றி சிவப்பேறாகிய பட்டம் வழங்குவார் என்பது திண்ணம்.

சிவ.சதீஸ்குமார்

The post சைவத்தைத் தழைக்கச் செய்த திருஞானசம்பந்தர் appeared first on Dinakaran.

Tags : Tirunnasambandar ,Thirujnanasambandhar ,Thirujnanasambandar ,
× RELATED அற்புதம் எது?