×

கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சிப் பூசல் உச்சகட்டம்; எடியூரப்பா மகனை எதிர்த்து போட்டியிடுவதில் ஈஸ்வரப்பா உறுதி..!!

பெங்களூரு: கர்நாடகா பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவதில் ஈஸ்வரப்பா உறுதியாக உள்ளார்.

கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்:

மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அதிருப்தியில் உள்ளார். ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்ற ஈஸ்வரப்பாவை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

எடியூரப்பா மகனை எதிர்த்து போட்டியிடுவதில் ஈஸ்வரப்பா உறுதி

எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவதில் ஈஸ்வரப்பா உறுதியாக உள்ளார். ஷிமோகா தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மகனுக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்கிறார். கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரான ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்பதால் எடியூரப்பா மகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஷிமோகா, சித்ரதுர்கா, பெங்களூரு வடக்கு, சிக்கமங்களூரு, மைசூரு, தாவணகரே தொகுதிகளில் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆலோசனை நடத்துவதற்காக ஈஸ்வரப்பாவை டெல்லிக்கு அழைத்த நிலையில் அவர் உடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார். பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ஈஸ்வரப்பா கருத்து தெரிவித்திருக்கிறார்.

உட்கட்சி பூசல்: கர்நாடகத்தில் பாஜகவுக்கு நெருக்கடி

ஒன்றிய அமைச்சராக இருந்த நாராயணசாமி, சித்ரதுர்கா தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். பெங்களூரு வடக்கு தொகுதியில் ஒன்றிய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு வாய்ப்பு வழங்காமல் சோபா கரந்தலஜேவுக்கு வாய்ப்பு வழங்கியதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சதானந்தா கவுடா ஆதரவாளர்கள் சோபா கரந்தலஜேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பாஜக வேட்பாளருக்கு நெருக்கடி ஏற்பட்டது. சோபா கரந்தலஜேவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் சதானந்த கவுடா, தனக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்ததாகவும் கூறியிருந்தார். சிக்கமங்களூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சி.டி.ரவி, மைசூருவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரதாப் சின்ஹாவும் போர்க்கொடி தூக்கினர்.

அதிருப்தி பாஜக தலைவர்களை சமரசம் செய்த அமித்ஷா:

பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். 6 தொகுதிகளிலும் உட்கட்சிப் பூசல் உச்சமடைந்துள்ளதால் பெங்களூரு பிரச்சாரத்துக்கு வந்துள்ள அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மற்ற அதிருப்தி நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா சமரச பேச்சு நடத்திய நிலையில் ஈஸ்வரப்பாவை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

The post கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சிப் பூசல் உச்சகட்டம்; எடியூரப்பா மகனை எதிர்த்து போட்டியிடுவதில் ஈஸ்வரப்பா உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka BJP ,Yishwarappa ,Yeddyurappa ,BENGALURU ,Eshwarappa ,Shimoga ,Lok Sabha ,
× RELATED கர்நாடகாவில் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஈஸ்வரப்பா வேட்புமனு தாக்கல்