×

பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் எழுத்தாளர் பாலசுப்பிரமணியனுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது : வருகிற 16ம் தேதி வழங்கப்படுகிறது

சென்னை: எழுத்தாளர் மா.அரங்கநாதனின் நினைவையொட்டி ஆண்டுதோறும் ஏப்ரல் 16ம் தேதி ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது’ முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியத் துறையில் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவர்களுடைய ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பு மற்றும் படைப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை, அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் வரும் ஏப்ரல் 16ம் தேதி ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது -2024’ விழா நடைபெறவுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவரும் பேராசிரியருமான தெ.ஞானசுந்தரம், எழுத்தாளர் கு.வெ.பாலசுப்பிர மணியன் ஆகியோருக்கு ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது – 2024’ வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து, ‘மா.அரங்கநாதன் படைப்புகள்’, பொருளின் பொருள் கவிதை ஆகிய நூல்களை நீதிபதி அரங்க. மகாதேவன் வெளியிடவுள்ளார். இவ்விழாவில், திருவானைக்கா ஓதுவார் ரமணி சீனிவாசன், சிறு கதை எழுத்தாளர் அகரமுதல்வன், ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியன், கவிஞர் எஸ்.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

விருது பெறவுள்ள பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் முதுபெரும் தமிழறிஞரான மு.வரதராசனாரின் மாணவர், ‘வைணவ உரைவளம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய இவர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறைப் பணியையும் சேர்த்து 37 ஆண்டுகள் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக பணியாற்றியுள்ளார். மேலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். எழுத்தாளர் கு.வெ.பா. என்கிற கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன் கவிதை, கதை, கட்டுரை, நாடகம், மொழிபெ யர்ப்பு, திறனாய்வு, கற்பித்தல் எனப்பல துறைகளிலும் தடம்பதித்தவர். 100க்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை இவர் எழுதியுள்ளார். கு.வெ. பாலசுப்பிரமணியன் எழுதிய பக்தி நூல்கள் பல இலங்கை மற்றும் பிரான்சில் உள்ள கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன.

The post பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் எழுத்தாளர் பாலசுப்பிரமணியனுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது : வருகிற 16ம் தேதி வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Prof. ,Thejnanasundaram ,Balasubramaniyan ,Chennai ,Munur Literary Organization ,Balasubramanian ,
× RELATED கவுன்சலிங் ரூம்