×

வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் ஒரு தொகுதியில் 2 சதவீதம் மனித தவறு நடக்க வாய்ப்பு: தயாரிக்கும் இடத்தில் பாஜவினர் நியமனம் என ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் ஒரு தொகுதியில் 2 சதவீதம் மனித தவறு நடக்க வாய்ப்புள்ளது. எனவே அதனை சரி செய்ய வேண்டுமென திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம் இயந்திரம்) கடந்த முறை செயல்படுத்தப்பட்ட நடைமுறையையே இந்த முறையும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி திமுக வழக்கு தொடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்த பேட்டி: தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் இதுவரை ஜெனரேஷன் 1 மற்றும் 2 என்று மட்டும் தான் இருந்து இருக்கிறது. இந்த தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் ஜெனரேஷன் 3 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிக்கு எதிரானது.

இது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையம் கவனத்திற்கு எடுத்து சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வழக்கு தொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரத்தில் 2 சதவீதம் மனித தவறு (man made error) உள்ளது என தெரிவித்து இருக்கிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22 லட்சம் வாக்குகள் உள்ளன. அதில் 2சதவீதம் என்றால் 46,000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. ஒரு தொகுதியில் 46,000 வாக்குகள் என்பது சாதாரணம் அல்ல.

1998 நாடாளுமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வேணுகோபால், சுமார் 200 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். கடந்த 2019 தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். வாக்காளர்கள் மீது நூற்றுக்கு நூறு நம்பிக்கை உள்ளது. ஆனால் கள்ளத்தனமாக யாரும் வந்து விடக்கூடாது. இனி வருங்காலங்களிலும் நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்காகவே திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

The post வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் ஒரு தொகுதியில் 2 சதவீதம் மனித தவறு நடக்க வாய்ப்பு: தயாரிக்கும் இடத்தில் பாஜவினர் நியமனம் என ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : RS Bharati ,BJP ,CHENNAI ,DMK ,RS Bharti ,RS ,Bharati ,Dinakaran ,
× RELATED மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை...