×

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி, கனிமொழி சோமு, ஷர்மிளா பாலாஜி பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர்கள், பிரபலங்கள் பலரும் சூறாவளி பிரசாரத்துக்கு களம் இறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 8ம்தேதி மத்திய சென்னையிலும், 9ம்தேதி வடசென்னையிலும், 10ம்தேதி நீலகிரியிலும், 11ம்தேதி திருப்பூரிலும், 12ம்தேதி கோவையிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதேபோன்று, திமுக மருத்துவ அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார். அதன்படி, 10ம்தேதி கோவையிலும், 11ம்தேதி பொள்ளாச்சியிலும், 12ம்தேதி ஈரோட்டிலும், 14ம்தேதி நீலகிரியிலும், 15ம்தேதி சேலத்திலும் பிரசாரம் செய்கிறார். மேலும், ஷர்மிளா பாலாஜி 10ம்தேதி அரக்கோணத்திலும், 11ம்தேதி வடசென்னையிலும், 13ம்தேதி மத்திய சென்னையிலும், 14ம்தேதி பெரும்புதூரிலும், 15ம்தேதி காஞ்சிபுரத்திலும், 16ம்தேதி திருவள்ளூரிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

* இது என்னடா புது கணக்கு..? தேமுதிக 4 எழுத்து தேர்தல் ரிசல்ட் 4ம் தேதி ஸோ…வெற்றி தான்; குறி சொல்கிறார் பிரேமலதா
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியது: ஏப்ரல் 19ம் தேதி காலையிலேயே நீங்கள் ஓட்டு போட சென்று விடுங்கள். இல்லை என்றால் உங்கள் ஓட்டு கள்ள ஓட்டாக மாற வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வு, காஸ் விலை உயர்வு, தங்கத்தின் விலை உயர்வு என ஒன்றிய அரசு விலைவாசியை ஏற்றிக் கொண்டே இருக்கிறது. கேப்டன் சொல்வார் நமக்கு ஆறறிவு உள்ளது. ஆகவே, சிந்தித்து வாக்களியுங்கள். அதிமுக நான்கெழுத்து, தேமுதிக நான்கு எழுத்து, எஸ்டிபிஐ நான்கு எழுத்து, தேர்தல் முடிவும் நாலாம் தேதி ஆகவே வெற்றி உறுதி. கூட்டணி தர்மத்தை மதித்து ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

உச்சி வெயிலில் தவித்த பெண்கள்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா காலை 10 மணிக்கு பேசுவார் என்று கூறப்பட்டதால், 9 மணியிலிருந்து பல்வேறு கிராமங்களில் இருந்து பெண்கள், மூதாட்டிகள் அழைத்து வரப்பட்டிருந்தனர். எதிர் வெயில் என்பதால் பெண்கள், மூதாட்டிகள் கடைகளில் முன்பு அமர்ந்திருந்தனர். வரவேற்பு பேனர்களின் நிழலிலும் அமர்ந்து காத்திருந்தனர். 12 மணியாகியும் பிரேமலதா வராததால் வெயிலில் காத்திருந்த பெண்கள், இப்படி உச்சி வெயிலில் வந்தால் உடம்புக்கு என்னாவது என்று புலம்பினார்கள். பிரேமலதா சரியாக 12.16 மணிக்கு பிரசாரம் செய்ய வந்ததால் கடைகளில் ஒதுங்கி இருந்த பெண்களை வாருங்கள் என்று கட்சியினர் அழைத்து, முன்னாடி இப்படி நில்லுங்கம்மா என்று கூறினர். ஆனால் பெண்கள் வர மறுத்து கடை நிழலில் நின்றும், அமர்ந்தும் இருந்தனர். இதனால் அவர்களை அழைத்து வந்த நிர்வாகிகள் டென்ஷன் ஆனார்கள்.

* பாஜவினரை கண்டித்து சுயேச்சை வேட்பாளர் பொங்கல் வைத்து போராட்டம்
வடசென்னை நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் பால் கனகராஜ் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது ஆதரவாளர்கள் பாஜவிற்கு வாக்கு சேகரிக்கும் வழியில் பல இடங்களில் சாலைகளில் தாமரை சின்னத்தை வரைந்து வைத்துள்ளனர். இந்தநிலையில் வடசென்னை தொகுதிக்கு சுயேச்சையாக பானை சின்னத்தில் போட்டியிடும் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பாலமுருகன், தேசிய மலரான தாமரையை காலில் மிதிபடும் அளவிற்கு சாலையில் வரைந்து இழிவுப்படுத்திய பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், எல்லையம்மன் கோவில் தெருவில் வாக்குச்சாவடிக்கு அருகே சாலைகளில் வரையப்பட்ட தாமரை சின்னங்களை உடனே அழிக்குமாறும் தேர்தல் ஆணையத்திடம் நேற்று புகார் அளித்திருந்தார். ஆனால் இவரது புகாரின் மீது தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் நேற்று சாலையில் வரையப்பட்ட தாமரை சின்னத்தின் மீது தனது சின்னமான பானையை வைத்து பொங்கலிட்டு விழிப்புணர்வு போராட்டம் நடத்தினார். அங்கு வந்த போலீசார் நடவடிக்கை எடுப்பதாக அவரை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.

The post இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் இமான் அண்ணாச்சி, கனிமொழி சோமு, ஷர்மிளா பாலாஜி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Iman Annachi ,Kanimozhi Somu ,Sharmila Balaji ,India Alliance ,Chief Minister ,M. K. Stalin ,DMK ,India ,
× RELATED மாநிலங்களவை உறுப்பினர்களாக...