×

ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான டாக்டரின் மருத்துவமனை, கல்லூரியில் ஐ.டி. ரெய்டு: பல கோடி சிக்கியது?

கோவை சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த நர்சிங் கல்லூரி செயல்படாமல் முடங்கியிருப்பதாக தெரிகிறது. ஆனால், இங்கே உள்ள கட்டிடத்தை மருத்துவமனை, கல்லூரி நிர்வாகத்தினர் ரகசிய பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இங்ேக ரகசிய இடத்தில் பெட்டி பெட்டியாக பல கோடி ரூபாய் பணம் பதுக்கி வைக்கப்பட்டு தேர்தலுக்கு பயன்படுத்துவதாக தகவல் பரவியது. இதையடுத்து மருத்துவமனை மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். கட்டிடத்தில் 50க்கும் மேற்பட்ட அறைகள், ரகசியமான சில பகுதிகள் இருப்பதாக தெரிகிறது. இங்கே அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் பல கோடி ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அறையை பூட்டிக்கொண்டு, மருத்துவமனை முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தனர். இந்த பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி அதற்கான ஆதாரங்களை கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிடிபட்ட பணம், மருத்துவ சேவையின் மூலம் பெறப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது வழியில் ஹவாலா முறையில் பணம் பெற்று அதனை பதுக்கி வைத்திருந்தார்களா? அரசியல் கட்சியினர் பினாமி மூலமாக பணம் பெற்று அதனை வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருந்தார்களா? என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வருமானவரித் துறை வசம் பிடிபட்ட பணம் தொடர்பாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் பல்வேறு ஆதாரங்களை கேட்டுள்ளனர். பண விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள்‌ தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்துமருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ‘‘2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை செய்தார்கள். பின்னர் சென்றுவிட்டார்கள். வேறு எந்த தகவலும் இல்லை’’ எனக்கூறினர்.

இதுதொடர்பாக வருமான வரித்துறையினரிடம் கேட்டபோது, ‘‘வருமான வரி சோதனை மற்றும் ஆவணம் ஆதாரங்கள் தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்க இயலாது. அவசியம் ஏற்பட்டால் தகவல் வெளியிடப்படும்’’ என்றனர். ஐ.டி. ரெய்டு நடந்த மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், எலும்பியல் நிபுணர். இவரது மனைவியும் டாக்டராக உள்ளார். அவர், மகப்பேறு மருத்துவ நிபுணர். இம்மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டரின் மாமனார், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர். அவர் மூலமாக, பணம் பரிவர்த்தனை எதுவும் நடந்ததா? அவர் மூலமாக அரசியல் கட்சியினர் பணம் ஏதேனும் இங்கு பதுக்கி வைக்கப்பட்டதா? என்பது பற்றியும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓபிஎஸ்சுக்கு நெருக்கமான டாக்டரின் மருத்துவமனை, கல்லூரியில் ஐ.டி. ரெய்டு: பல கோடி சிக்கியது? appeared first on Dinakaran.

Tags : Doctor's Hospital ,OPS ,Raid ,Coimbatore ,Saravanampatti ,Singhanallur ,Madhukarai ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு