×

மண்டியாவில் தனித்து போட்டி என்று அறிவித்த நிலையில் பாஜவில் இணைவதாக சுமலதா அறிவிப்பு

பெங்களூரு: மண்டியாவில் தனித்து போட்டியிடப்போவதாக கூறிவந்த அத்தொகுதி சுயேட்சை எம்.பி சுமலதா பாஜவில் இணைவதாக அறிவித்துள்ளார். 2019 மக்களவை தேர்தலில் மண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதாவிற்கு பாஜ ஆதரவளிக்க, பாஜ ஆதரவுடன் அமோக வெற்றி பெற்று எம்.பி ஆனார். இந்த மக்களவை தேர்தலிலும் மண்டியா தொகுதியில் தனித்து போட்டியிடுவதாகவும் பாஜ ஆதரவளிக்க வேண்டும் என்று சுமலதா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். ஆனால் மஜதவுடன் கூட்டணி அமைத்து இத்தேர்தலை சந்திக்கும் பாஜ, மண்டியா தொகுதியை மஜதவிற்கு ஒதுக்குவதால் சுமலதாவிற்கு ஆதரவளிக்க முடியாது என்பதை தெரிவித்துவிட்டது.

இதையடுத்து மண்டியாவில் தனித்து போட்டியிடுவது உறுதி என்று சுமலதா அறிவித்திருந்தார். இந்நிலையில், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய சுமலதா, ‘பாஜவில் இணைவதாக முடிவெடுத்தார்’. இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘ எனது சேவை பாஜவிற்கு தேவை என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. பிரதமருக்கு மரியாதை கொடுத்து நான் பாஜவில் இணைகிறேன். என்னை வேறு தொகுதியில் போட்டியிடுமாறு பாஜ தலைவர்கள் கூறினர். மண்டியாவின் மருமகளான நான் வேறு தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை. மண்டியாவில் பாஜவின் வளர்ச்சிக்காக உழைப்பேன். பாஜவில் இணைந்த பின்னரே, குமாரசாமிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

The post மண்டியாவில் தனித்து போட்டி என்று அறிவித்த நிலையில் பாஜவில் இணைவதாக சுமலதா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sumalatha ,BJP ,Mandya ,Bengaluru ,2019 ,Lok Sabha elections ,
× RELATED பிரசாரத்திற்கு பாஜ, சுமலதா ஒத்துழைக்கவில்லை: தேவகவுடா வேதனை