×

அமலாக்கத்துறை கைதை எதிர்த்த வழக்கு கெஜ்ரிவால் விடுதலை ஆவாரா? டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இதற்கிடையே, திகார் சிறையில் கெஜ்ரிவால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால், நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வக்கீல் அபிஷேக் சிங்வி, ‘‘ அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் செயல்பாட்டை முடக்கி அவரை அவமானப்படுத்தி புண்படுத்த வேண்டும் என்பது அமலாக்கத்துறையின் அடிப்படை நோக்கமாகும்’’ என்றார். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, ‘‘வழக்கு ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். தேர்தல் நடக்கிறது என்பதற்காக யாரையும் கைது செய்யாமல் இருக்க முடியாது.

நீங்கள் கொலை செய்து விட்டு, தேர்தலை காரணம் காட்டி குற்றவாளியை கைது செய்யக் கூடாது என்பீர்களா? கெஜ்ரிவாலிடம் விசாரணை என்பது ஆரம்ப கட்டத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். இந்த முறைகேட்டில் அவரது மொத்த தொடர்பையும் விசாரணையின் முடிவில் தான் தெரிந்து கொள்ள முடியும். முதலில் காவலில் எடுத்து விசாரிக்க எந்த எதிர்ப்பும் இல்லை என கூறியவர், தற்போது அதையே எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்ப்பட்டது ஆகும்’’ என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

அடிசிக்கு பாஜ அவதூறு நோட்டீஸ்:

‘ஒரு மாதத்தில் பாஜவில் சேர வேண்டும், இல்லாவிட்டால் சிறைக்கு செல்ல தயாராக வேண்டும்’ என பாஜ தரப்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக டெல்லி அமைச்சர் அடிசி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இதுதொடர்பாக ஆதாரங்களை அவர் காட்டத் தவறியதால் மன்னிப்பு கேட்கக் கோரி அடிசிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக டெல்லி மாநில பாஜ தலைவர் வீரேந்திர சச்தேவா கூறினார்.

The post அமலாக்கத்துறை கைதை எதிர்த்த வழக்கு கெஜ்ரிவால் விடுதலை ஆவாரா? டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi High Court ,New Delhi ,Aam Aadmi Party ,Tihar Jail ,Delhi ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் மேல்முறையீடு...