×

மயிலாடுதுறை அருகே நள்ளிரவு சாலையில் ஓடிய சிறுத்தை: மக்கள் பீதி, பள்ளிக்கு விடுமுறை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் உள்ளது. இது நகர பகுதியாகும். இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளது. இந்த பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படும். கூறைநாட்டை சேர்ந்தவர் ஜெயசீலன்(35). மயிலாடுதுறையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து நேற்றிரவு 11 மணியளவில் செம்மங்குளம் சாலை வழியாக பைக்கில் கூறைநாட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

செம்மங்குளம் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் நாய்கள் குரைத்து கொண்டு ஓடி வந்தது. இதனால் பைக்கை நிறுத்தி விட்டு ஜெயசீலன் பார்த்தார். அப்போது சாலையில் ஒரு சிறுத்தை வேகமாக ஓடியது. அந்த சிறுத்தையை துரத்தியவாறு 3 நாய்கள் ஓடி வந்தது. இதைப்பார்த்து ஜெயசீலன் அதிர்ச்சியடைந்தார். சிறிது நேரத்தில் சிறுத்தை இருட்டான இடத்தில் மறைந்து விட்டது.

இதுகுறித்து கூறைநாடு போலீசாருக்கு ஜெயசீலன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் செம்மங்குளம் சாலையில் சிறுத்தை ஒன்று ஓடி வருகிறது. இதை பார்த்து 3 நாய்கள் குரைத்தவாறு விரட்டி செல்வதும், அதன்பின்னர் சிறுத்தை மறைந்ததும் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ 3 விநாடிகள் ஓடுகிறது.

இதையடுத்து மயிலாடுதுறை வனத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன உயிரின காப்பாளரும், வனச்சரக அலுவலரான டேனியல் ஜோசப் தலைமையிலான வன அலுவலர்கள் 15 பேர் வந்து ெசம்மங்குளம் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல் பங்க்கில் இருந்து 50 அடி தூரத்தில் வாய்க்காலுக்கு செல்லும் வழியில் ஒரு விலங்கின் காலடி தடம் பதிவாகி இருந்தது. அந்த பகுதியில் உள்ள காலடி தடத்தை வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு இது சிறுத்தையின் காலடி தடம் தான் என்று உறுதி செய்தனர்.

இதையடுத்து வலைகளை எடுத்து கொண்டு செம்மங்குளம் பகுதியில் தெரு தெருவாக வனத்துறையினர் தேடினர். வனத்துறையினருடன் இணைந்து தீயணைப்புத்துறை அலுவலர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று இன்று காலை முதல் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். செம்மங்குளம் பகுதிக்கு மயிலாடுதுறை ஆர்டிஓ யுரேகா, தாசில்தார் விஜயராணி ஆகியோர் இன்று காலை வந்து வனத்துறை அதிகாரிகள், போலீசாரிடம் விசாரித்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர்.

இதுகுறித்து மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளதாவது: செம்மங்குளத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி வந்து பார்த்தபோது சிறுத்தையின் காலடி தடம் இருந்தது. மேலும் கண்காணிப்பு கேமராவிலும் சிறுத்தை ஓடிய காட்சி பதிவாகியுள்ளது. சாலையில் இருந்து சிறுத்தை ஓடி மறைந்த இடத்தில் ஒரு பன்றி கடிபட்ட நிலையில் இறந்து கிடக்கிறது. அந்த பன்றியை சிறுத்தை தான் கடித்து கொன்றதா என இன்னும் உறுதிப்படுத்தவில்லை. செம்மங்குளம் பகுதி முழுவதும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிறுத்தை இருப்பதை உறுதிப்படுத்திய பின், கூண்டு வைத்து அதை பிடிக்கும் பணியில் ஈடுபடுவோம்.

செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுவதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம். செம்மங்குளம் பகுதியில் சிறுத்தையை யாராவது பார்த்தால் 9360889724 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். செம்மங்குளத்தில் பால சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால், இந்த பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். சிறுத்தை விரைவில் பிடிக்கப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை‌ என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அச்சத்துடன் உள்ளோம்
செம்மங்குளம் பகுதி மக்கள் கூறுகையில், செம்மங்குளத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்று கூறுவதை நம்ப முடியவில்லை. இருப்பினும் கேமராவில் சிறுத்தை ஓடியது பதிவாகியுள்ளது. இதனால் நாங்கள் அனைவரும் அச்சத்துடன் உள்ளோம். எனவே இந்த பகுதிக்குள் புகுந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நகர பகுதிக்கு வந்தது எப்படி?
கூறைநாடு செம்மங்குளம் நகர பகுதியாகும். இந்த பகுதிக்கு அருகே வனப்பகுதி எதுவும் கிடையாது. சிறிய வாய்க்கால் மட்டுமே உள்ளது. இந்த பகுதிக்கு சிறுத்தை வருவதற்கான வாய்ப்பே இல்லை. இங்கிருந்து 100 கிமீ தொலைவில் வேதாரண்யம் உள்ளது. அங்கும் சிறுத்தைகள் இல்லை. இந்தநிலையில் செம்மங்குளத்தில் சிறுத்தை நடமாட்டம் எப்படி உள்ளது, சிறுத்தை எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

The post மயிலாடுதுறை அருகே நள்ளிரவு சாலையில் ஓடிய சிறுத்தை: மக்கள் பீதி, பள்ளிக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthura ,Mayiladudura ,Thaynadu Semmangkulam ,Jayaseelan ,Mayiladuthur ,
× RELATED பயணியிடம் நகை பறித்த வாலிபர் சிறையிலடைப்பு