×

கோயில்களுக்கு தானமாக வழங்கியவைகளில் எத்தனை பசுக்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டன?: அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்

சென்னை : கோயில்களுக்கு தானமாக வழங்கியவைகளில் எத்தனை பசுக்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டன? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள், தனிநபர்களுக்கு அரசு வழங்கியுள்ளது.பால் கொடுப்பதை நிறுத்திய இந்த பசுக்கள் அடிமாடுகளாக 25 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்கப்படுகின்றன. இதுசம்பந்தமாக அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தனிநபர்களுக்கு பசுக்களை வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட கால்நடைகளை பாதுகாக்க உரிய விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும். 2000ம் ஆண்டு முதல் 2021 வரை கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள், காளைகள், கன்றுகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உத்தரவிட வேண்டும். கோவில்களில் கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்களை தனிநபர்களுக்கு இலவசமாக வழங்க தடை விதிக்க வேண்டும்,” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பசுக்கள் பால் கொடுப்பதை நிறுத்திய பின், அர்ச்சகர்கள், சுய உதவி குழுக்கள், கோ சாலைகளுக்கு வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தானமாக பெற்ற பசுக்களை கோயில்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பசுக்கள் அவர்களிடம் தான் இருக்கின்றனவா என யார் கண்காணிப்பது? எனவும் கேள்வி எழுப்பினர். இறுதியாக கோயில்களுக்கு தானமாக வழங்கியவைகளில் எத்தனை பசுக்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டன? என்று குறித்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

The post கோயில்களுக்கு தானமாக வழங்கியவைகளில் எத்தனை பசுக்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டன?: அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madras High Court ,Rangarajan Narasimhan ,Srirangam ,Trichy ,Srirangam Ranganathar ,
× RELATED பொதுநல வழக்கு: ரங்கராஜன் நரசிம்மன்...