×

25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் எண்ணூரில் பிரபல தனியார் பள்ளியை மூடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: காவல்நிலையத்தில் புகாரால் பரபரப்பு

திருவொற்றியூர்: சென்னை எண்ணூர் பர்மா நகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக விவேகானந்தா வித்யாலயா என்ற பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையில் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள்தான் அதிகமாக படிக்கின்றனர்.

இந்தநிலையில் பள்ளியை நிரந்தரமாக மூடிவிட்டு ஜோதி நகரில் உள்ள கிளை பள்ளியில் மாணவர்களை சேர்க்க நிர்வாக முடிவு செய்துள்ளது. இதுசம்பந்தமாக கடந்த வெள்ளிக்கிழமை பெற்றோர்- ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் கிருஷ்ணன், ‘’பர்மா நகர் பள்ளியை மூடப் போவதாகவும் எனவே, இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஜோதி நகரில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிப்பை தொடர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு பெற்றோர், ‘’பள்ளியை மூடுவதை ஏற்க முடியாது. இன்னும் ஓராண்டு காலஅவகாசம் கொடுத்து இருக்க வேண்டும். பர்மா நகருக்கும் ஜோதி நகருக்கும் இடையே சுமார் 4 கி.மீ. தூரம் உள்ளது. இங்கிருந்து செல்வதற்கு வாகன வசதிகள் கிடையாது. கனரக வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய பகுதியில் பிள்ளைகளை படிக்க அனுப்புவது ஆபத்தானது. எனவே, பள்ளியை இங்கேயே நடத்தவேண்டும்’ என்று தெரிவித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில், 3வது வார்டு கவுன்சிலர் தமிழரசன் என்ற தம்பியா தலைமையில் கிராம நிர்வாகிகள், பெற்றோர்கள் என 100க்கு மேற்பட்டவர்கள் எண்ணூர் காவல் நிலையத்துக்கு வந்தனர். காவல் உதவி ஆணையர் வீரக்குமார், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோரை சந்தித்து விவேகானந்தா வித்யாலயா பள்ளியை எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி மூடுவதாக அறிவித்துள்ள நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். இதுசம்பந்தமாக பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர்கள் கூறியதாவது;
பர்மா நகரில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியை நிறுவுவதற்கு கிராம நிர்வாகம், பொதுமக்கள் பல்வேறு உதவிகள் செய்தனர். அனைத்து மாணவர்களிடமும் இந்தாண்டுக்கான கல்வி கட்டணம் முழுவதும் வசூல் செய்துவிட்டு திடீரென்று பள்ளியை மூடுவதாக அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. ஜோதி நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் பள்ளி கட்டிடங்கள் காலியாக இருக்கிறது என்பதற்காக இந்த பள்ளியை தேவையில்லாமல் மூடும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதை நாங்கள் விடமாட்டோம். பள்ளியை தொடர்ந்து இங்கே நடத்த வேண்டும். அல்லது பள்ளியை பர்மா நகர் கிராம நிர்வாகத்திடம் ஒப்படைத்து அவர்கள் மூலம் பள்ளியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் எண்ணூரில் பிரபல தனியார் பள்ளியை மூடுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: காவல்நிலையத்தில் புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ennoor ,Vivekananda Vidyalaya ,Parma Nagar ,Ennore, Chennai ,Ennore ,
× RELATED எண்ணூரில் மீன் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்