×

மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே பரபரப்பு பைக்கில் ெசன்றவரை வழிமறித்து ₹1.50 கோடி பணம் கொள்ளை: நன்கொடையாக வழங்கப்பட்ட பணமா என சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை

சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே பைக்கில் சென்ற தனியார் கல்லூரி ஊழியரை வழிமறித்து ரூ.1.50 கோடி ரொக்கம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலின் வாக்குபதிவு வரும் 19ம் ேததி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், வாக்காளர்களுக்கு கொடுக்க பல்வேறு இடங்களில் பணம் பட்டுவாடா தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிகளவில் பணம் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரி அதிபர் ஒருவர் தற்போது தேசிய கட்சியில் உள்ளார். அவருக்கு சொந்தமான ரூ.1.50 கோடி ரொக்க பணத்தை ஊழியர் ஒருவர் பைக்கில் நேற்று மயிலாப்பூர் சாய்பாபா கோயில் தெரு வழியாக எடுத்து ெசன்றுள்ளார். இதுகுறித்து முன்பே தகவல் அறிந்த மர்ம நபர்கள் 4 பைக்குகளில் தனியார் கல்லூரி ஊழியரின் பைக்கை பின் தொடர்ந்து சாய் பாபா கோயில் அருகே கத்திமுனையில் வழிமறித்து ரூ.1.50 கோடி ரொக்க பணத்தை பையுடன் கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி ஊழியர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாய் மொழியாக புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் சாய்பாபா கோயில் சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எழுத்து மூலமாக புகார் கொடுக்க வேண்டும் என்று தனியார் கல்லூரி ஊழியரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் எழுத்து பூர்வமாக இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும், இருந்தாலும் போலீசார் கொள்ளை தொடர்பாக சிசிடிவி பதிவுகளின் படி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வழிப்பறி செய்யப்பட்ட ரூ.1.50 கோடி பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க தேசிய கட்சி ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தாலும் போலீசார் வழிப்பறி தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே பரபரப்பு பைக்கில் ெசன்றவரை வழிமறித்து ₹1.50 கோடி பணம் கொள்ளை: நன்கொடையாக வழங்கப்பட்ட பணமா என சிசிடிவி பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mylapur Saibaba temple ,CHENNAI ,Saibaba temple ,Mylapore ,Mylapore Saibaba temple ,Dinakaran ,
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது