×

எனக்கும், தமிழகத்துக்குமான காதல் சாதாரணமானதல்ல… புனிதமானது: துறையூரில் கமல் பிரசாரம்

தா.பேட்டை: பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து துறையூர் பாலக்கரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் நடிகர் கமலஹாசன் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:
பரிவட்டம் கட்டினால்தான் தேர் இழுப்பேன். இழுக்க வருவேன் என்று சொல்பவன் நான் அல்ல. நமக்கு தேர் நகர்ந்தாக வேண்டும். அதற்கு எந்த பகுதியில் இருந்தும் கயிறு இழுக்க நான் தயார். எனக்கும் இந்திய நாட்டிற்கும், தமிழகத்திற்குமான காதல் சாதாரணமானதல்ல. அரசியலையும் தாண்டி புனிதமானது. திடீர்னு டயலாக் சொல்வதாக நினைக்க வேண்டாம். 40 ஆண்டுகளாக எதையும் எதிர்பாராமல் நற்பணி மன்றங்களாக இயங்கி வந்தவர்கள் நாங்கள்.

தேடி தீர்ப்போம் வா என்று தேடி அலைந்தவர்கள் நாங்கள். இன்றும் நாங்கள் தேடி வந்திருக்கிறோம். சீட்டு கேட்டு வரலைங்க. தம்பிக்காக ஓட்டு கேட்டு வந்திருக்கேன். தமிழகத்திற்காக நியாயம் கேட்க வந்துள்ளேன். பாஜ அரசு ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி இல்லை என்பது நாடறிந்த உண்மை. ஆனால் நம்ம ஊரில் வரி செலுத்துகின்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே வருகிறது. இதை வைத்துதான் காலை உணவு திட்டம், மகளிருக்கான நிதி உதவி திட்டம், இலவச பஸ் பாஸ், அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு கல்லூரி வரை சென்று படிக்க திட்டங்களை செய்கிறோம். 71 பைசாவை கொடுத்து பாருங்கள். நமது திராவிட மாடல் நாட்டுக்கான மாடலாக இருக்கும்.

கிழக்கு இந்திய கம்பெனியை வெள்ளையனே வெளியேறு என்று கூறி வெளியேற்றினோம். தற்போது மேற்கத்திய கம்பெனி கூட்டாளியோடு வந்துள்ளது. இந்த மேற்கிந்திய கம்பெனி செய்யும் லீலைகள் என்ன? நாற்காலி கை நழுவும் போல இருந்தால் அண்ணன் தம்பிகளை மதத்தின் பெயரால் மோதவிடு, அதுவும் பலிக்கவில்லையா கவர்னரை அனுப்பி இடைஞ்சல் செய். அதுக்கும் மசியவில்லையா… தமிழர்கள், முதல்வர்களை கைது செய்யுங்கள். அதுவும் பலிக்க வில்லையா ஓட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடுங்கள். நான் கதை விடவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தான் கூறுகிறேன்.

10 வருடங்களாக அவர்கள் சுட்ட வடையில் அசிடிட்டி அதிகமாகி விட்டது. ஏனென்றால் அது வடை அல்ல. வெறும் காற்று. வாயில் சுட்ட வடை. யாருக்கு வாக்களித்தால் உங்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும், நாடு அமைதி பூங்காவாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். நம் மீது, கலாசாரத்தின் மீது, மொழியின் மீது கை வைப்பவர்கள் மீது மை வைத்து தான் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட கமல்
கமல்ஹாசன் பேசும்போது அந்த வழியே நோயாளியை ஏற்றி கொண்டு 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதைபார்த்த கமல்ஹாசன், தொண்டர்களை ஒதுங்கி வழி ஏற்படுத்தி தருமாறு கேட்டு கொண்டார். இதையடுத்து அவர்கள் வழிவிட்டனர். ஆம்புலன்ஸ் சென்றதும் தொண்டர்களுக்கு நன்றி கூறினார்.

The post எனக்கும், தமிழகத்துக்குமான காதல் சாதாரணமானதல்ல… புனிதமானது: துறையூரில் கமல் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kamal Prasaram ,Dharayur ,Tha.Pettai ,Kamala Haasan ,Makkal Neeti Maiyam Party ,DMK ,KN Arun Nehru ,Perambalur ,Constituency ,Palakkarai, Thardayur ,Kamal ,Thariyaur ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...