×

முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள்

* 69 வளாகங்கள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகள்* மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி கொள்கையால் மேலும் அதிகரிக்கும்சென்னை: தமிழகத்தில் புதிதாக 17 இடங்களில் ஏற்படுத்தப்பட்ட அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையின் போது 2,350 எம்பிபிஎஸ் இடங்கள் வழங்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் 69 மருத்துவக்கல்லூரிகள் மூலமாக 10,375 எம்பிபிஎஸ் இடங்களை வழங்கும் என தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மருத்துவக்கல்லூரி இருக்க வேண்டும் என தமிழக அரசு கொள்கை வகுத்துள்ளதால், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு தெரிவித்ததாவது: தமிழகத்தில் 37 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 5,125 இடங்கள் உள்ளன. அவை அரசு மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்த 11 புதிய கல்லூரிகளில் 1,450 எம்பிபிஎஸ் இடங்களை சேர்க்க முடியும். ஒரு வருடத்தில் அதிக அளவில் இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மேலும் 50 இடங்களில் மாணவர்களை சேர்க்க எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து 2021ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மருத்துவக்கல்லூரி இடங்களில் தமிழகத்தில் 12% உள்ளது. இதன் மூலம் 15% அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், தமிழகம் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வழங்கும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருந்து 15% இளநிலை இடங்கள் ஆன்லைன் சேர்க்கைக்காக சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் கீழ் உள்ள மருத்துவ ஆலோசனைக் குழுவுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 85% இடங்களுக்கான சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையிலும், இடஒதுக்கீடு சட்டத்தின் படியும் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் நான்கு சுயநிதி மருத்துவக்கல்லூரிகள், அதாவது திருவண்ணாமலை-அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, நாமக்கல்- சுவாமி விவேகானந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை – டாக்டர் லலிதாம்பிகை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, கிருஷ்ணகிரி – செயின் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவை  டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2021ம் ஆண்டில் புதிதாக 600 எம்பிபிஎஸ் இடங்களில் மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்பட்டது. இதேபோல் வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை (நிகர்நிலை பல்கலைக்கழகம்), சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (தனியார் பல்கலைக்கழகம்) ஆகியவை தலா 150 இடங்களை வழங்குகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் ஒரு மருத்துவக்கல்லூரி இருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை. மேலும் ஏற்கனவே இருக்கும் அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் 250 இடங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது, நியாயமான கட்டணத்தில் மருத்துவ கவனிப்பை வழங்கவும், மாநிலத்தின் ஊரக பகுதிகளுக்கு மூன்றாம் நிலை சுகாதார சேவையை எடுத்துச்செல்லவும் உதவும். தற்போது இளநிலை மருத்துவ படிப்பு மட்டும் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 5 ஆண்டுகளில் முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் சிறப்பு துறைகள் தொடங்கப்படும். புதிய மருத்துவக்கல்லூரிகள் உள்ள மாவட்டங்களில் இரண்டாம் நிலை மருத்துவ மனைகளைத் தொடங்க ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கோரியுள்ளோம். மாவட்ட தலைமையக மருத்துவமனைகள் கற்பித்தல் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு, மருத்துவக்கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க இரண்டாம் நிலை சிகிச்சை மருத்துவமனைகள் தேவைப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் appeared first on Dinakaran.

Tags : CM. G.K. ,Tamil Nadu ,Stalin ,Chennai ,Principal ,B.C. ,G.K. Stalin ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...