×

வீடுகளுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு

 

கோவை, ஏப். 3: தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, கட்டாயம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வெற்றிலை பாக்குடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விஏஓக்கள் கோவில்பாளையம், காப்பளாங்கரை, கக்கடவு ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மேள தாளம் முழங்க சென்று தட்டில் பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வர வேண்டும் என தெரிவித்தனர். இதே போல், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருடம்பாளையம் கிராமத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விஏஓ யோகநாதன் தேர்தல் திருவிழா அழைப்பிதழை வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து கிராமப்பகுதிகளில் அதிகாரிகள் தேர்தல் திருவிழா அழைப்பிதழ்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இது தவிர, மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு தினமும் ஏற்படுத்தப்பட்டு வருவதால், வரும் பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post வீடுகளுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி அதிகாரிகள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu ,Pollachi ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...