×

சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு: கொடைக்கானலில் பரபரப்பு

 

கொடைக்கானல், ஏப். 3: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானலில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வனவிலங்குகளின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் காட்டு மாடுகள் சர்வ சாதாரணமாக உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் காட்டு மாடுகள் தாக்கி மனித உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஏரி அருகேயுள்ள லோயர் சோலா சாலை பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது அவ்வழியே வந்த காட்டு மாடு ஒன்று திடீரென அந்த வாகனத்தை வழிமறித்ததுடன் முட்டியும் தள்ளியது.

இதனால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து காரை வேகமாக வேறு திசையில் திருப்பி சென்று விட்டனர். மேலும் கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் காட்டு மாடு ஒன்று தொடர்ந்து முகாமிட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை வனப்பகுதிககுள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு: கொடைக்கானலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்