கொடைக்கானல், ஏப். 3: கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் கழக குடோன். இங்கு திண்டுக்கல்லில் இருந்து லாரி மூலம் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை சேமித்து வைத்து கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். இந்நிலையில் நேற்று இந்த மாதத்திற்கான மேல்மலை பகுதிக்கு உரிய ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
லாரியை செல்வம் என்பவர் ஓட்டி வந்தார். கொடைக்கானல் மேல்மலை பூம்பாறை பகுதி மலைச்சாலையில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 100 அடி பள்ளத்தில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் சேதமாகின. டிரைவர் செல்வம் சிறு காயங்களுடன் தப்பினார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது லாரி appeared first on Dinakaran.