×

இரவு நேரங்களில் அணை பகுதியில் தங்க வேண்டாம்: பழநி வனத்துறையினர் விவசாயிகளுக்கு எச்சரிக்கை

 

பழநி, ஏப். 3: பழநி பகுதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் தங்க வேண்டாமென விவசாயிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பழநி வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் உள்ளன. தற்போது வனப்பகுதிக்குள் போதிய நீர் மற்றும் உணவு இல்லாததால் இந்த யானை கூட்டம் அடிக்கடி பழநி வனப்பகுதி அருகில் உள்ள அணைகளுக்கு வந்து நீர் அருந்த வருகின்றன.
இதற்கிடையே அணைகளில் போதிய நீர் இல்லாததால் அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து நிலக்கடலை, வெள்ளரி போன்ற குறுகிய கால பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

இதனை யானை கூட்டம் நாசம் செய்யாமல் இருக்க விவசாயிகள் பட்டாசு வெடித்தல், அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளை பயன்படுத்துதல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இதில் கோபம் கொல்லும் யானைகள் விவசாயிகளை விரட்டுகின்றன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, யானைகள் மாலை நேரங்களிலும், அதிகாலை நேரங்களில்தான் அணைக்கு வருகின்றன. இந்த நேரங்களில் விவசாயிகள், அணை பகுதியில் இருந்தால் யானைகளை விரட்ட முற்படுவர்.

இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மா லை, அதிகாலை நேரங்களில் விவசாயிகள் அணைகளுக்குள் செல்ல வேண்டாமென்றும், இரவில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தங்கக் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, வன அலுவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களைக் கொண்டு யானைகளின் நடமாட்டத்தை தீவிர கண்காணித்து வருகிறோம். இவ்வாறு கூறினர்

The post இரவு நேரங்களில் அணை பகுதியில் தங்க வேண்டாம்: பழநி வனத்துறையினர் விவசாயிகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani forest department ,Palani ,Palani forest ,Dinakaran ,
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு