சென்னை: பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் தொடர்பாக வந்த புகாரையடுத்து சென்னை ஓட்டேரி, ஏழுகிணறு, கொண்டிதோப்பு, புரசைவாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் தற்போது நடைமுறையில் இருப்பதால், ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுத்து செல்லலாம் என்றும், அதற்கு மேல் பணம் எடுத்து சென்றால் உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே நேரம் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் வரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக ரூ.110 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சத்திற்கு மேல் கொண்டு செல்லும் நபர்களின் வீடுகளில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் குறிப்பாக வடசென்னை பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிகளவில் பரிசு பொருட்கள் கொள்முதல் செய்து பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்கரா தெருவை சேர்ந்த தொழிலதிலபர் இன்துராம் என்பவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் சோதனை நடத்தினர். மேலும், ஓட்டேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கட்டுமான நிறுவன அதிபர் ஒருவரின் வீடு, கொண்டித்தோப்பில் தொழிலதிபருக்கு சொந்தமான வீடு, புரசைவாக்கத்தில் ஒரு வீடு என சென்னையில் 5 இடங்களில் சோதனை நடந்தது. இந்த தொழிலதிபர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பரிசு பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்து வருபர்கள் என கூறப்படுகிறது.
கடந்த வாரம் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், வாக்காளர்களுக்கு கொடுக்க அரசியல் பிரமுகர்களுக்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் பல கோடிக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் கொள்முதல் செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
The post பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் தொடர்பாக சென்னையில் 5 தொழிலதிபர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் appeared first on Dinakaran.