×

தமிழக பாஜவில் பொறுப்பில் உள்ள 261 ரவுடிகள் மீது 1,977 வழக்குகள்: போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து இணைந்ததாக குற்றச்சாட்டு

சென்னை: தமிழக பாஜவில் பொறுப்பில் 261 ரவுடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, செம்மரம் கடத்தல் வழக்குகள் உள்பட 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளதாம். அவர்கள் ேபாலீசின் நடவடிக்கைக்கு பயந்து ஒன்றியத்தில் ஆளும் பாஜவில் இணைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழக பாஜவில் அண்ணாமாலை மாநில தலைவரான பிறகு கட்சியை வளர்க்க வேண்டும், பரபரப்பாக வைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆனால், அவர் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் கட்சியை வளர்ப்பதற்கு பதில் கடும் விமர்சனத்துக்கும், பொதுமக்களின் கேலி, கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. குறிப்பாக உட்கட்சி தகராறை தீர்ப்பதாக நினைத்து கட்சியினரை வீடியோ எடுத்து வெளியிடுவது, அவர்களது ஆடியோக்களை வெளியிடுவது என்று செய்வதால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்திக்குள்ளாகி கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

அதன் ஒரு கட்டமாகத்தான் ரவுடிகள் பலரையும் அண்ணாமலை கட்சியில் சேர்த்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் 261 ரவுடிகளை அவர் கட்சியில் சேர்த்துள்ளார். ஒவ்வொருவர் மீதும் கொலை, கொலை மிரட்டல், வெடிகுண்டு வீசுதல், தாலி செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை என்று பல்வேறு வழக்குகள் உள்ளன. அதில் சென்னை போலீஸ் எல்லையில் உள்ள 9 ரவுடிகள் பாஜவில் இணைந்துள்ளனர். அவர்கள் மீது மட்டும் 86 வழக்குகள் உள்ளன.

அதேபோல ஆவடியில் உள்ள 8 ரவுடிகள் மீது 60 வழக்குகள், தாம்பரம் போலீஸ் எல்லையில் 11 ரவுடிகள் மீது 206 வழக்குகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 ரவுடிகள் மீது 54 வழக்குகள், திருவள்ளூரில் 5 ரவுடிகள் மீது 14 வழக்குகள், காஞ்சிபுரத்தில் 5 ரவுடிகள் மீது 109 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, கள்ளக்குறிச்சியில் 1 ஒரு ரவுடி மீது 4 வழக்கு, கடலூரில் 13 ரவுடிகள் மீது 36 வழக்கு, வேலூரில் ஒரு ரவுடி மீது 28 வழக்கு, ராணிப்பேட்டையில் ஒரு ரவுடி மீது 4 வழக்கு, திருப்பத்தூரில் 3 ரவுடிகள் மீது 27 வழக்கு, திருவண்ணாமலையில் 4 ரவுடிகள் மீது 5 வழக்கு, கோவையில் 3 ரவுடிகள் மீது 27 வழக்கு, கோவை நகரத்தில் உள்ள போலீஸ் எல்லையில் பாஜ ரவுடிகள் 10 பேர் மீது 112 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தர்மபுரியில் 2 ரவுடிகள் மீது 2 வழக்கு, கிருஷ்ணகிரியில் 2 ரவுடிகள் மீது 8 வழக்கு, நாமக்கல்லில் ஒரு ரவுடி மீது 34 வழக்கு, திருப்பூர் சிட்டியில் 2 ரவுடி மீது 31 வழக்கு, திருப்பூர் மாவட்டத்தில் 10 பாஜ ரவுடிகள் மீது 44 வழக்கு, ஈரோட்டில் 4 ரவுடிகள் மீது 50 வழக்கு, நீலகிரியில் 2 ரவுடிகள் மீது 11 வழக்கு, திருச்சி நகரத்தில் 2 ரவுடிகள் மீது 31 வழக்கு, பெரம்பலூரில் 1 ரவுடி மீது 6 வழக்கு, அரியலூரில் 5 ரவுடி மீது 21 வழக்கு, தஞ்சையில் 20 ரவுடிகள் மீது 88 வழக்கு, நாகப்பட்டினத்தில் 3 பாஜ ரவுடிகள் மீது 4 வழக்கு,

மயிலாடுதுறையில் 7 ரவுடிகள் மீது 26 வழக்கு, மதுரை நகரத்தில் உள்ள ரவுடிகள் 10 பேர் மீது 51 வழக்கு, மதுரை மாவட்டத்தில் ஒரு ரவுடி மீது 5 வழக்கு, விருதுநகரில் 4 ரவுடிகள் மீது 26 வழக்கு, தேனியில் ஒரு ரவுடி மீது 12 வழக்கு, திண்டுக்கல் 2 ரவுடி மீது 17 வழக்கு, ராமநாதபுரத்ததில் 7 ரவுடிகள் மீது 61 வழக்கு, சிவகங்கையில் 14 ரவுடிகள் மீது 79 வழக்கு, திருநெல்வேலி நகரத்தில் 4 ரவுடிகள் மீது 19 வழக்கு, திருநெல்வேலி மாவட்டத்தில் 11 ரவுடிகள் மீது 62 வழக்கு, தென்காசியில் பாஜ ரவுடிகள் 4 பேர் மீது 19 வழக்கு,

தூத்துக்குடியில் பாஜ ரவுடிகள் 13 பேர் மீது 134 வழக்கு, கன்னியாகுமரியில் ரவுடிகள் 11 பேர் மீது 68 வழக்குகள் என தமிழகம் முழுவதும் பாஜவில் உள்ள 261 ரவுடிகள் மீது 1977 வழக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருமே கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள். போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள். கூலிப்படையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் போலீசுக்குப் பயந்து ஒன்றிய ஆளும் கட்சியான பாஜவில் இணைந்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு உள்ளூர் போலீசை மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இவர்கள் பலர் போலீசாரால் தேடப்பட்ட வரும் குற்றவாளிகளாகவும், நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களாகவும் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. அதில் ஒரு சிலர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

The post தமிழக பாஜவில் பொறுப்பில் உள்ள 261 ரவுடிகள் மீது 1,977 வழக்குகள்: போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து இணைந்ததாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu BJP ,Chennai ,BJP ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...