×

தேர்தல் களத்தில் அனல் பறக்கும் அரக்கோணம் மக்களவையில் வெற்றி யார் வசம்?..

தமிழ்நாட்டின் 7வது நாடாளுமன்ற தொகுதியாக கருதப்படும் அரக்கோணம் இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்க தொகுதியாகும். இங்கு ஆன்மிக ஸ்தலங்களை பொறுத்தவரை சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. வேளாண் மற்றும் தொழில் துறையை பின்னணியாக கொண்ட இங்கு கரும்பு, நெல், வாழை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன.

இந்த தொகுதியில் கடந்த 1977 முதல் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யார் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு முன்பு இந்த தொகுதியில் அடங்கியிருந்தது. இதன் பின்னர், கடந்த 2008 மறுசீரமைப்பிற்கு பின், திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் இணைக்கப்பட்டன.

இங்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர்கள், முதலியார்கள் மற்றும் நாயுடு உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இந்த தொகுதியில் ஆயிரக்கணக்கானோர் தினசரி சென்னைக்கு பணி சம்பந்தமாக வந்து செல்கின்றனர். அதிகப்படியாக ரயில்களை தங்களின் போக்குவரத்து வசதிக்காக பயன்படுத்துவோர் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், பத்து நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில், அரக்கோணம், திருத்தணி ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதுதான்.

அதேபோல், அரக்கோணம் – சென்னை இடையிலான 3வது மற்றும் 4வது ரயில்பாதை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக அப்பகுதி மக்களிடையே உள்ளது. இந்த தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் 5 முறை, திமுக 3 முறை, அதிமுக 2 முறை, தாமக மற்றும் பாமக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியை யார் கைப்பற்ற போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, திமுக சார்பில் 4வது முறையாக அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன், அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன், பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்சியா நஸ்ரின் ஆகியோர் களம் காண்கின்றனர். ஏற்கனவே, கடந்த முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் அனைத்து கிராமங்களிலும் குடி நீர் பிரச்னை தீர்க்கப்பட்டிருப்பதாகவும், அனைத்து ஊர்களிலும் பள்ளிகள் கட்டி கொடுத்திருப்பதாகவும், ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக பேருந்து நிலையங்களை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஜெகத்ரட்சகன் இந்த தொகுதிக்கு மிகவும் பரீட்சயமான முகமாக கருதப்படுவதாலும், அவர் இந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த பல்வேறு திட்டங்களாலும் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளார். இவருக்கான வாக்கு விகிதம் கடந்த முறையை விட இந்த முறை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனை பொறுத்தவரை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை தன்னுடைய பரப்புரைகள் மூலமாக மக்களிடையே முன்வைத்து வாக்கு பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், பாமக சார்பில் பாலுவும் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். மும்முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில் வெற்றி யார் வசம் என்பது வாக்காளர்களின் விரல் நுனியில்தான் உள்ளது.

The post தேர்தல் களத்தில் அனல் பறக்கும் அரக்கோணம் மக்களவையில் வெற்றி யார் வசம்?.. appeared first on Dinakaran.

Tags : Arakonam ,Lok ,Sabha ,Tamil Nadu ,Solingar Lakshmi Narasimha ,Hill ,Temple ,Tiruthani ,Arupada ,Murugan ,Lok Sabha ,
× RELATED ஸ்டிராங் ரூம் சிசிடிவி கேமராக்களில் கோளாறால் பரபரப்பு!