×

ஊழல் பணம் எதையும் மீட்காமல் சிறையில் வைத்திருப்பது ஏன்? ஆம் ஆத்மி எம்.பி.க்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், ஊழல் பணம் எதையும் மீட்காமல், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை 6 மாதமாக சிறையில் வைத்திருந்தது ஏன்? என அமலாக்கத்துறை சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், எம்பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் அம்மாநில துணை முதல்வர் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியான சஞ்சய் சிங், பிஆர்எஸ் தலைவர் கவிதா, கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கடந்த 6 மாதமாக சிறையில் இருக்கும் எம்பி சஞ்சய் சிங் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராகவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. இந்நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் சஞ்சய் சிங் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் சிங் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘எந்த முகாந்திரமும் இல்லாமல் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வரையில் நடத்தப்பட்ட விசாரணையில் பணம் உட்பட எதுவும் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்படவில்லை’’ என்று தெரிவித்தார். இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ எதிர்ப்பு தெரிவித்தார். எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதாடினார்.

அப்போது நீதிபதிகள், ‘‘சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அவரிடம் எந்த பொருளும் மீட்கப்படவில்லை. இந்த வழக்கில் கைதான தினேஷ் அரோரா, அவரது 10வது வாக்குமூலத்தில் சஞ்சய் சிங் பெயரை குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் மீதான ரூ.2 கோடி லஞ்சப் புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவரிடம் இருந்து எந்த பணமும் மீட்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அவரை எப்படி 6 மாதமாக சிறையில் அடைத்து வைக்கலாம்? இந்த 6 மாதத்தில் கூட எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.

எனவே சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் அமலாக்கத்துறைக்கு ஆட்சேபணை இருக்கிறதா என்பதை தெரியப்படுத்த வேண்டும்’’ என்றனர். இதையடுத்து, காலையில் எதிர்ப்பு தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, பிற்பகலில் ஆஜராகி, ‘‘சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் அமலாக்கத்துறைக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், அவர் அரசியல் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும், வழக்கு தொடர்பான அறிக்கை எதுவும் வெளியிடக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர்.

மேலும் முழு விசாரணையின் போதும் சஞ்சய் சிங் ஜாமீனில் இருப்பார் என்றும், அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் சிறப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அடுத்தடுத்து ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், முதல் முறையாக ஒருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவை ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன.

* சர்வாதிகாரிகளின் கோட்டை இடிகிறது; கல்பனா சோரன்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் கூறுகையில், சர்வாதிகார சக்திகளின் கோட்டை இடிந்து விழத் தொடங்கியுள்ளது. சஞ்சய் சிங், அநியாய சிறைவாசத்திற்கு எதிரான மாபெரும் போரில் வெற்றி பெற்றுள்ளார். இது உண்மைக்கும் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி, இது இந்தியாவின் வெற்றி. சஞ்சய்சிங், அவரது மனைவி அனிதா மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* வாய்மையே வெல்லும் ஆம்ஆத்மி பெருமிதம்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து டெல்லி அமைச்சர்கள் அடிசி, சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: நாட்டில் ஜனநாயகத்திற்கு இது ஒரு பெரிய நாள், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் தருணம். இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் போலி வழக்குகளில் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற நடவடிக்கைகளில், இரண்டு முக்கியமான விஷயங்கள் மக்கள் முன் வந்துள்ளன.

இந்த வழக்கில் பணம் எங்கே சென்றது என்று உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு அமலாக்கத்துறையிடம் எந்த பதிலும் இல்லை. மேலும் அமலாக்கத்துறையின் முழு வழக்கும், கெஜ்ரிவாலுக்கு எதிராக கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. வாய்மையே வெல்லும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post ஊழல் பணம் எதையும் மீட்காமல் சிறையில் வைத்திருப்பது ஏன்? ஆம் ஆத்மி எம்.பி.க்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Aam Aadmi Party ,Sanjay Singh ,Delhi ,Aam Aadmi ,Dinakaran ,
× RELATED புதிய மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த்...