×

தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இடைவெளி குறைக்க நடவடிக்கை: பொது சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் குழந்தை பிறந்ததில் இருந்து 18 வயதை அடையும் வரை பல்வேறு கால கட்டங்களில் உரிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சில பெற்றோர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இன்னமும் தயக்கம் உள்ளது. மேலும் சிலர் முதல் தவணை செலுத்திய பிறகு அடுத்த தவணை தடுப்பூசி செலுத்துவதில்லை அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்த தவணை தடுப்பூசி செலுத்துவதில்லை. இதனால் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதை தடுக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி அடைய முடியாததிற்கு என்ன காரணம் என்பதை மாவட்ட அளவில் பொது சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது: தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக குழந்தை பருவத்தில் செலுத்த வேண்டிய நோய்த் தடுப்பு தடுப்பூசி 95 முதல் 99 சதவீதத்தை எட்டியுள்ளது. அதனை 100 சதவீதமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தை பிறக்கும்போதே செலுத்தப்படும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, 12 மாத வயதிற்குள் செலுத்த வேண்டிய அனைத்து தடுப்பூசிகளுடன், 10 வயதில் செலுத்தப்படும் டெட்டனஸ்-டிப்தீரியா (டிடி) தடுப்பூசிகளும் அனைத்து தவணைகளும் செலுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்கணித்து வருகிறோம்.

எங்களிடம் ஒரு தகவல் அளிக்கும் பலகை உள்ளது. அதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் எந்த மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்துவதில் குறைவான சதவீதம் உள்ளதோ அந்த மாவட்டத்தில் சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி போலியோ சொட்டு மருந்து உள்ளிட்ட தடுப்புசிகள் ஒரு தவணை செலுத்தி மற்ற தவணை செலுத்தாதவர்களை கண்காணித்து வருகிறோம். அந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

The post தமிழகத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி இடைவெளி குறைக்க நடவடிக்கை: பொது சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Public Health Department ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...