×

தேர்தல் அதிகாரிகள் சோதனையால் வணிகர்கள் பாதிப்பு; ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் விக்கிரமராஜா கோரிக்கை

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது: 2014க்கு பின்னர் செலவினங்களும், விலைவாசி உயர்வும் 4 மடங்கு உயர்ந்து இருக்கிறது. வணிகர்கள் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் ரொக்க பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே கடந்த மாதம் 16ம் தேதி அனுமதி கோரி இருந்தோம். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், விதிமுறைகளை அமல்படுத்தும் தேர்தல் அதிகாரிகள், பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக அத்துமீறல்களில் ஈடுபட்டு இருப்பதும், ரூ.2 ஆயிரம் எடுத்துச் செல்லும் ஒரு சாதாரண இருசக்கர வாகனத்தில் செல்லும் வழிபோக்கரைக்கூட கணக்கு கேட்டு நீண்டநேரம் காத்திருக்க வைக்கும் நிலை உள்ளது.

தொடர்ந்து இதே நிலை நீடிக்குமானால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, தேர்தல் முடியும் வரை கடையடைப்பு செய்வதை தவிர வேறு வழியில்லை எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ரூ.2 லட்சம் வரை ரொக்கப்பணம் எடுத்துச் செல்வதற்கு உரிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். இதுநாள் வரை கைப்பற்றப்பட்ட ரொக்கம், பொருட்கள் போன்றவற்றை உரியவர்களிடம் உடனடியாக திருப்பி அளித்து, வணிகத்தை காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

19ம் தேதி தேர்தல் முடிகின்ற நாளோடு தேர்தல் நடைமுறைகளை தளர்த்தி, ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கான உச்சவரம்பு ஏதுமின்றி அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் நாளை (இன்று) அதிகாரிகளை அழைத்து வியாபாரிகள் பாதிக்காத சூழ்நிலையை உருவாக்கி தருவதாக தேர்தல் அதிகாரி உறுதி அளித்திருக்கிறார். அதேபோன்று மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர்களை அழைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளிடம் பேசி இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள அறிவுறுத்துவதாகவும் கூறியுள்ளார். இது உடனடியாக அமலுக்கு வந்தால் பிரச்னை இல்லை. இதை மீறினால், முதல்கட்டமாக வருகின்ற 9ம் தேதி (செவ்வாய்) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

The post தேர்தல் அதிகாரிகள் சோதனையால் வணிகர்கள் பாதிப்பு; ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Wickramaraja ,Chief Electoral Officer ,CHENNAI ,president ,Tamil Nadu Federation of Merchants' Associations ,AM ,Tamil Nadu ,Satyapratha Chagu ,Chief Secretariat ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான...