×

விற்றல் மற்றும் பணமாக்கல் குறித்த தேர்தல் பத்திரம் தகவலை வெளியிட எஸ்பிஐ மறுப்பு: இன்னும் என்ன ரகசியம் வேண்டி கிடக்கு என ஆர்டிஐ ஆர்வலர் கேள்வி

புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் விற்பனை மற்றும் பணமாக்குதல் தொடர்பான செயல்பாட்டு நடைமுறை விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கி மறுத்து விட்டது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க கடந்த 2018ல் ஒன்றிய பாஜ அரசால் கொண்டு வரப்பட்ட ரகசியம் காக்கும் தேர்தல் பத்திரம் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதை ரத்து செய்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) உத்தரவிட்டு, அதுதொடர்பான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆர்டிஐ ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில், ‘தேர்தல் பத்திரம் விற்பது மற்றும் பணமாக்குவது தொடர்பாக எஸ்பிஐயின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளுக்கு தேர்தல் செயல்பாட்டு நடைமுறை விவரங்களை வழங்க வேண்டும்’ என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்பிஐ வங்கி, ‘இது ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவில் வருவதால் விவரங்களை வெளியிட முடியாது’ என கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அஞ்சலி பரத்வாஜ், ‘‘தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, அனைத்து விவரங்களை வெளியிட உத்தரவிட்ட பிறகும், எஸ்பிஐ வங்கி முக்கிய தகவல்களை தெரிவிக்காமல் மறுத்து வருவது ஆச்சரியமாக உள்ளது’’ என்றார்.

The post விற்றல் மற்றும் பணமாக்கல் குறித்த தேர்தல் பத்திரம் தகவலை வெளியிட எஸ்பிஐ மறுப்பு: இன்னும் என்ன ரகசியம் வேண்டி கிடக்கு என ஆர்டிஐ ஆர்வலர் கேள்வி appeared first on Dinakaran.

Tags : SBI ,RTI ,NEW DELHI ,SBI Bank ,Union BJP government ,Dinakaran ,
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...