×
Saravana Stores

அருணாச்சலபிரதேச பகுதிக்கு பெயர் சூட்டிய விவகாரம்; பிரதமர் மோடி வாய்திறக்காதது ஏன்? காங்கிரஸ் சரமாரி கேள்வி

புதுடெல்லி: அருணாச்சலபிரதேச மாநிலத்தில் 30 கிராமங்களுக்கு சீனா புதிய பெயரை சூட்டியுள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் விசித்திரமான அறிக்கை அரசின் பலவீனத்தையே காட்டுகிறது. 2020 மே மாதத்திற்குப் பிறகு சீனாவின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் நிலம் எவ்வளவு உள்ளது. அதைக் காலி செய்ய ஏன் மோடி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக இந்த பிரச்னையில் திசை திருப்புதல் மற்றும் ஏமாற்றுதல் வேலைகளை செய்வது ஏன்? அதற்குப்பதில் கச்சத்தீவு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு விவகாரத்தை தொடுவது ஏன்? கச்சத்தீவு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக மோடி அரசு தவறான தகவல்களை பரப்புகிறது.

பாகிஸ்தானை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாத ஒரு பிரதமர் இந்திராகாந்தி. அவர் வேறு எந்த நாட்டிற்கும் இந்தியாவின் எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுப்பார் என்று நினைப்பதை விட கேலிக்குரியது எதுவும் இல்லை. ஆனால் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா ஊடுருவி, அங்கு நமது நிலத்தை ஆக்கிரமித்து சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும், பிரதமர் மோடி இன்னும் எந்த பதிலும் கூறவில்லை.

2023 ஜனவரியில் அப்போதைய சீன ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த 65 கூட்டு ரோந்து நிலையங்களில் 26 ரோந்துப் பகுதிகளை இந்தியா அணுக முடியவில்லை என்று டிஜிபி மாநாட்டில் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், ஒன்றிய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்திய இந்த தகவலைப் பற்றி எந்த எதிர்வினையும் மோடி அரசு செய்யவில்லை. சீனாவைப் பொறுத்தவரை ஏன் இவ்வளவு மவுனம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, தேசபாதுகாப்பு குறித்து மோடி அரசு எந்தவித அக்கறையும் காட்டவில்லை என்பதற்கு இதைவிட பெரிய சான்று என்ன வேண்டும்?. இவ்வாறு எழுப்பினார்.

The post அருணாச்சலபிரதேச பகுதிக்கு பெயர் சூட்டிய விவகாரம்; பிரதமர் மோடி வாய்திறக்காதது ஏன்? காங்கிரஸ் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Arunachal Pradesh ,Modi ,New Delhi ,China ,Senior ,Congress ,Manish Tiwari ,Union Foreign Minister ,Jaisankar ,Congressional ,
× RELATED சைபர் மோசடி குறித்து விழிப்புடன்...