×

அதிமுக வேட்பாளர் பிரசாரத்திற்கு தாமதமாக வந்ததால் ஆத்திரம் வாக்கு சேகரிக்க ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடிப்பு: சொந்த கட்சியினரின் செயலால் அதிருப்தி; அதிமுகவினரை திட்டி தீர்த்த வாகன ஓட்டிகள்; மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே பிரசாரத்திற்கு தாமதமாக வந்த அதிமுக வேட்பாளரை சொந்த கட்சியினரே ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடித்தனர். இதனால் செந்த கட்சியினரின் இந்த செயலால் வேட்பாளர் கடும் அதிருப்பதி அடைந்தார். இதே போல் மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றதால் வாகன ஓட்டிகளுக்கு அதிமுகவினரை திட்டி தீர்த்தனர். இச்சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நேற்று திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

காலை முதல் மாலை வரை எந்தெந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும். எந்த நேரம் என்பதை பட்டியலிட்டிருந்த நிலையில் பட்டியலில் உள்ள நேரப்படி எந்த இடத்திற்கும் செல்லாமல் அனைத்து இடங்களுக்கும் பல மணி நேரம் தாமதமாகவே சென்றதால் வாட்டி வதைக்கும் வெயில் வேளையில் பல மணி நேரம் கட்சியினரை காக்க வைத்ததால் பெரும்பாலான இடங்களில் கட்சியினர் டென்ஷனாகி விட்டனர். அதேப்போல், திருக்கழுக்குன்றம் அடுத்த பள்ளஈகை கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் முள்ளிக் கொளத்தூர் என்ற இடத்தில் காலை முதல் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு வர வேண்டிய வேட்பாளர் மதியம் 1 மணியை கடந்தும் வராததால் அப்பகுதி அதிமுக நிர்வாகிகளே மக்களை அங்கிருந்து வீடுகளுக்கு போகச் சொன்னதால் வெயிலில் பசியோடு காத்திருந்த கட்சியினர் மீண்டும் பள்ளஈகை கிராமத்திற்கே சென்று விட்டனர்.

அதனைத்தொடர்ந்து, 2 மணிக்கு மேல் வந்த வேட்பாளர் ராஜசேகர் பள்ளஈகை வாக்காளர்களை சந்திக்க பிரசார வேனில் சென்றார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ராகவன் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது கிராமத்தில் நுழைந்த வேட்பாளரின் வாகனத்தை அதிமுகவினர் வழிமறித்து, “நீங்கள் எங்களை மதிக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்து விட்டீர்கள். எங்கள் ஊரில் நீங்கள் வரக்கூடாது மரியாதையாக திரும்பி போங்கள்’’ என்று வாகனத்தை விரட்டியடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு பிரசார வாகனத்தை விட்டு இறங்கி வந்த வேட்பாளர் ராஜசேகர் கட்சியினரிடம் காலதாமதத்திற்கு மன்னித்து விடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். அதையும் ஏற்க மறுத்து கட்சியினர் கோபத்துடனே அவரை திருப்பி அனுப்பி வைத்தனர்.

மாமல்லபுரம்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் மாமல்லபுரம் பேரூராட்சி, கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, வடகடம்பாடி, குழிப்பாந்தண்டலம், எச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதில், முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி, செங்கல்பட்டு அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன், அதிமுக மாவட்ட துணை செயலாளர் எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் பிரசாரத்திற்கு வந்தனர்.

மேலும், பிரச்சாரத்தின்போது, பல கிராமங்களில் கொடி பிடிக்கக்கூட ஆள் இல்லாமல் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கூட்டம் விரல் விட்டு எண்ணும் அளவில் காணப்பட்டனர். இதைப் பார்த்த, அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் சோர்வடைந்து காணப்பட்டார். மேலும், இசிஆர் சாலையின் நடுவே பின்னால் வரும் மற்ற வாகனங்களுக்கு வழிவிடாமல் வேட்பாளர் பிரசார வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இதனால், அவ்வழியே பயணித்த வாகன ஓட்டிகள் கடுப்பாகி அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை கடுமையாக திட்டி தீர்த்தனர். இதனால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு, பரபரப்பு நிலவியது.

முன்னதாக, வடக்கு மாமல்லபுரம் பகுதியில் அதிமுக பிரசார வாகனங்கள் வேகமாக வந்ததால், அங்கு சாலையோரம் படுத்திருந்த மாடுகள் திடீரென எழுந்து நின்று போக வழி தெரியாமல் சாலையில் தாறுமாறாக அங்கும், இங்கும் ஓடியது. இதனால், அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. கிராமத்துக்குள் நுழைந்த வேட்பாளரின் வாகனத்தை அதிமுகவினர் வழிமறித்து, “நீங்கள் எங்களை மதிக்காமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்து விட்டீர்கள். எங்கள் ஊரில் நீங்கள் வரக்கூடாது மரியாதையாக திரும்பி போங்கள்’’ என்று வாகனத்தை விரட்டியடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

The post அதிமுக வேட்பாளர் பிரசாரத்திற்கு தாமதமாக வந்ததால் ஆத்திரம் வாக்கு சேகரிக்க ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டியடிப்பு: சொந்த கட்சியினரின் செயலால் அதிருப்தி; அதிமுகவினரை திட்டி தீர்த்த வாகன ஓட்டிகள்; மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Mamallapuram, Thirukkalukunnam ,Thirukkalukkunram ,Thirukkalukunram ,Mamallapuram ,ECR ,Bustle ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்