×

கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாத பாஜ வேட்பாளர் பாமக – அமமுகவினர் பிரசாரத்திற்கு டிமிக்கி: திருவள்ளூர் தொகுதியில் பரபரப்பு

புழல்: திருவள்ளூர் மக்களவை தொகுதியில் கூட்டணிக் கட்சியை கண்டு கொள்ளாத பாஜ வேட்பாளரால், பிரசாரம் செய்யாமல் பாமகவினர், அமமுகவினர் புறக்கணித்து வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜ என 3 அணிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் பாஜ வேட்பாளராக பாலகணபதி போட்டியிடுகிறார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், மாதவரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பாமக பெரும்பான்மையாக உள்ளது. இதன் காரணமாக பாமகவுடன் கூட்டணி அமைக்க பாஜ இளவு காத்த கிளியாக காத்திருந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைத்தது. முதலில் ஆர்வமின்றி கூட்டணி அமைத்த பாமக, ஒருகட்டத்தில் முழுமனதோடு, பாஜவில் இணைந்து செயல்பட தொடங்கியது.

தங்களது கூட்டணிக்கு வராத பாமகவை அதிமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும், பாஜவின் ஆட்டம் போகப் போகத் தெரியும், என்று தேர்தல் கூட்டணி குறித்து கவுன்ட்டர் அடித்தது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திருவள்ளூர் தொகுதியில் பாஜவின் தேர்தல் பிரசாரம் மந்தமாக உள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் பாஜ வேட்பாளர் கூட்டணிக் கட்சியான பாமகவினர் இல்லாமலே பிரசாரத்திற்குச் செல்வதாகவும், தங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றும் பாமகவினர் புலம்புகின்றனர். இதனால், பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும், தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் தங்களது சொந்த வேலையை கவனிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து, பாமக மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து, மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என நாங்கள் துடிப்புடன் செயல்படுகிறோம். அதற்காக பாஜ தலைமையில் பாமகவுடன் கூட்டணி அறிவித்த அடுத்த நாளே, அனைத்து பகுதிகளிலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, பாஜ வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது என முடிவு செய்தோம். ஆனால், எங்களுக்கு இதுவரை முறையான அழைப்புகளும், தகவல்களும் தெரிவிக்காமல் பாஜவினர் தனித்து செயல்படுகின்றனர். தேர்தல் குறித்து எங்களிடம் ஆலோசனை செய்யவில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தேர்தல் வேலைகளை கவனிக்காமல் புறக்கணித்து வருகின்றனர். பாஜவின் இத்தகைய செயலால் அவர்களுக்குத்தான் நஷ்டம். அப்புறம், எங்களை குறை சொல்லக்கூடாது என்றனர். பாஜவில் பிரதான கூட்டணிக் கட்சியாக விளங்கும் பாமகவை பாஜ நிர்வாகிகள் கண்டுகொள்ளாத சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம்
திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி நேற்று காலை 7 மணியளவில் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம், எறையூர் பகுதியில் இருந்து சித்தம்பாக்கம் மொன்னவேடு, பூண்டி உள்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்காக நிர்வாகிகளுக்கு நேர அட்டவணை கொடுத்த நிலையில் தொண்டர்கள், நிர்வாகிகள், அமமுக கட்சியினர் என அனைவரும் 7.30 மணியளவில் பிரசாரம் தொடங்கும் இடத்திற்கு வந்தனர். ஆனால் 1.5 மணி நேரம் காலதாமதமாக 9 மணிக்கு வந்த வேட்பாளர் பாலகணபதியிடம் அமமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தங்களது கொடிகளை நடவில்லை, நிர்வாகிகளுக்கு உரிய மரியாதையும் தரவில்லை, நிகழ்ச்சி குறித்து தகவலையும் பாஜவினர் தெரிவிப்பதிலை என்று கூறி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை சமாதானம் செய்து அருகே உள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரசாரத்தை தொடங்கலாம் என அழைத்துச் சென்றனர். கோயிலுக்குச் சென்ற வேட்பாளர் விநாயகரை கும்பிட்டநிலையில், கோயிலுக்குள் பாஜ தொப்பி மற்றும் துண்டு அணிந்திருந்த நிர்மலா என்ற பெண் ஆரத்தி தட்டை நீட்டினார். அப்போது அமமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலை ஆயிரம் ரூபாயை வேட்பாளரிடம் கொடுக்க, அதை வாங்கி அந்த தட்டில் வேட்பாளர் போட்டவுடன், அந்தப் பெண்ணோ செய்தியாளர்கள் வீடியோ எடுக்கிறார்கள் என லாவகமாக தட்டில் இருந்து எடுத்து தட்டுக்கடியில் பணத்தை மறைத்த சம்பவம் அரங்கேறியது.

இந்த பிரசாரத்தின் போது வாகனத்திற்கு முன்புறமும், பின்பிறமும் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில் பிரசார வாகனத்தின் முன்னால் பட்டாசுகளை கொளுத்தியதால் பிரசாரத்திற்கு நின்றிருந்த பெண்கள், முதியவர்கள் என அலறியடித்து ஓடினர். மேலும் பிரசாரக் கூட்டத்திற்கு 2 டிராக்டர்களில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள், முதியவர்களை அழைத்து வந்திருந்தனர். ஆனால் வேட்பாளர் காலதாமதமாக வந்ததால் 100 நாள் வேலை செய்யும் இடத்தில் என்ன சொல்லப் போகிறார்களோ என புலம்பிக்கொண்டே மீண்டும் பெண்கள் டிராக்டரில் ஏறிச் சென்றனர். இதில் தேர்தல் விதிமுறைகளை மீறி தீபாராதனை காட்டிய பெண்ணுக்கு பாஜ வேட்பாளர் ஆயிரம் ரூபாய் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* காதில் வாங்கவில்லை
திருவள்ளூர் தொகுதியின் பாஜ வேட்பாளர் பாலகணபதி நேற்று பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு குறைந்த பாஜ நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட பீமன்தோப்பு பகுதியில் வாக்கு சேகரிக்க நடந்து சென்ற அவரை, அப்பகுதி பெண்கள் வழிமறித்தனர். தங்களுக்கு மோடி வழங்கும் மானிய காஸ் வழங்கவில்லை எனவும், பாஜ கட்சியைச் சேர்ந்த உறவினர்களுக்கு மட்டும் பார்த்துப் பார்த்து காஸ் அளிப்பதாகவும் குமுறினர். பெண்களின் கோரிக்கையை ஏற்காத பாலகணபதி, எதையில் காதில் வாங்காத வகையில் தனக்கு ஓட்டு போடுங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

The post கூட்டணி கட்சிகளை கண்டுகொள்ளாத பாஜ வேட்பாளர் பாமக – அமமுகவினர் பிரசாரத்திற்கு டிமிக்கி: திருவள்ளூர் தொகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Tiruvallur ,BJP ,BAM ,AM ,MUK ,Puzhal ,Tiruvallur Lok Sabha ,AAM ,AIADMK ,BAMKA ,AMMUK ,Dinakaran ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...