×

லப்பை கண்டிகை கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே லப்பை கண்டிகை கிராமத்தில், வாக்குச்சாவடி மையம் அமைக்கக்கோரி, கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கலைவாணியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வளத்தூர் ஊராட்சியில் லப்பை கண்டிகை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 120 கிராமங்களை சேர்ந்த 365 வாக்காளர்கள் இருந்து வருகின்றனர். இக்கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வலியுறுத்தியும், இத்தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அக்கிராம மக்கள் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கலைவாணியை சந்தித்து கோரிக்கை நேற்று மனு அளித்தனர்.

இதுகுறித்து அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது: லப்பை கண்டிகை கிராமத்தில் இருந்து வளத்தூர் கிராமத்துக்கு 4 கி.மீ.தூரம் உள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் பலரும் லப்பை கண்டிகை கிராமத்திலிருந்து 4 கி.மீ.தூரம் நடந்துச்சென்று, வளத்தூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பது என்பது இயலாத காரியம். இக்கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். ஏற்கனவே, வாக்குச்சாவடி மையம் லப்பை கண்டிகை கிராமத்தில் இருந்தது.

தற்போது அந்த வாக்குச்சாவடி மையம் வளத்தூருக்கு மாற்றம் செய்துள்ளனர். வாக்காளர்களின் நலனை கருத்தில் கொண்டு லப்பை கண்டிகையிலும் வாக்குச்சாவடி மையத்தை அமைக்க வேண்டும். இல்லையேல் கிராம மக்கள் 365 பேரும் வாக்களிக்க போவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தோம். அடுத்த தேர்தலுக்கு வாக்குச்சாவடி மையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கலாம். இப்போது அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் லப்பை கண்டிகை கிராமத்தில் உள்ள 365 வாக்காளர்களும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post லப்பை கண்டிகை கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Labai Kandikai village ,Kanchipuram ,Kotakshiar Kalaivani ,Labai Kandigai village ,Labai Kandigai ,Balathur panchayat ,Walajabad ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு