×

கோடைகால வெயிலில் இருந்து வாழை மரங்களை பாதுகாக்க வழிமுறை: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: வாழை மரங்களின் 2 பக்கங்களில் மூங்கில், சவுக்கு மரங்களை கட்டி வைத்தால் கோடை காலத்தில் வெயிலில் இருந்து மரங்களை பாதுகாக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடுமையான வெப்ப காலங்களில் வறட்சியின் தாக்கத்திலிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக சொட்டு நீர் பாசனம் அமைத்து சாகுபடி மேற்கொண்டாலும், அந்த நீரை வறட்சி காலங்களில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ள காய்ந்த வாழை இலை, கரும்பு தோகை, வைக்கோல் போன்றவற்றை மரத்தை சுற்றி நிலபோர்வை அமைப்பதன் மூலம், வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாதலை தடுப்பதோடு மட்டுமின்றி, செடிகளுக்கு உறிஞ்சும் திறனை அதிகரித்து வறட்சியிலிருந்து பயிர்களை பாதுகாக்க முடியும்.

மேலும், கடுமையான கோடை வெப்பத்திலிருந்து மரத்தின் தண்டுகளையும், அதன் பட்டைகளையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்காக சூரிய ஒளி நேராகப்படும் தண்டுகளை அதற்கு மேல் உள்ள பூட் லீப் எனப்படும் மேல் இலைகளை வைத்து மூடாக்கு போன்ற ஒரு தடுப்பை அமைத்து சூரிய ஒளியிலிருந்து மரத்தின் தண்டுகளை பாதுகாக்கலாம். இதனால், அந்த தண்டு பாதிக்கப்பட்டு நோய் கிருமிகளால் மரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க முடியும். கோடை காலங்களில் சித்திரை சூளி எனப்படும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காற்று கடுமையாக வீசும். அந்த காற்றில் பாதிப்பு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்து விடும். இதை தடுப்பதற்கு மரத்தின் 2 பக்கங்களிலும் மூங்கில் அல்லது சவுக்கு கொம்புகளால் (ஸ்டேக்கிங் எனப்படும்) ஊன்றுகோல் அமைத்து, மரத்தை கட்டி வைப்பதன் மூலம் கோடை காற்றிலிருந்து மரங்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கோடைகால வெயிலில் இருந்து வாழை மரங்களை பாதுகாக்க வழிமுறை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Collector ,Kalachelvi Mohan ,Kanchipuram District ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் கலெக்டர் நேரில் ஆய்வு