×

விளம்பரங்களில் தவறான தகவல் வெளியீடு; நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தால் நேரில் ஆஜர்

புதுடெல்லி: விளம்பரங்களில் தவறான தகவல் வெளியிட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தால் நேரில் ஆஜராகிய பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். வடமாநிலத்தை சேர்ந்த பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவின் நிறுவன மருந்து பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக் கூடாது. பதஞ்சலி நிறுவனத்தின் பொய்யான மற்றும் தவறான விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நீதிமன்றம் இத்தகைய மீறல்களை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும், ஒவ்வொரு பொருளின் விளம்பரத்தின்மீதும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம். இது தொடர்பாக பாபா ராம்தேவ் பதிலளிக்க வேண்டும்’ என எச்சரித்து உத்தரவிட்டிருந்தனர். ஆனால் உச்ச நீதிமன்ற நோட்டீசுக்கு பாபா ராம்தேவ் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கிடையில், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் ஹிமா கோலி, அமானுல்லாஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘பாபா ராம்தேவின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் என்ன? இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்கு பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்’ என காட்டமாகத் தெரிவித்தனர். அதையடுத்து மேற்கண்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் தங்களது செயலுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக அவர்களது வழக்கறிஞர் கூறினார். தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.

The post விளம்பரங்களில் தவறான தகவல் வெளியீடு; நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தால் நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Baba Ramdev ,Supreme Court ,New Delhi ,Baba Ramde ,Northern State ,Patanjali Company ,Dinakaran ,
× RELATED பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி