×

தென்சென்னை தொகுதியில் உள்ள பெண்களை தொழில் முனைவோராக மாற்றிக் காட்டுவேன்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரசாரத்தில் சபதம்

சென்னை: தென்சென்னை தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தாமரை பூவை காட்டி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், பெண்களால் நடத்தப்படும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சென்று ‘அக்கா வந்திருக்கிறேன்’ என்று கூறி அவர்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருவது தொகுதி முழுவதும் அவரை பிரபலமடையச் செய்துள்ளது.

மேலும், ஒவ்வொரு பகுதிகளிலும் வீதி வீதியாக சென்று அடிப்படை பிரச்னைகள் உள்ள இடங்களில் பிரச்சார வாகனத்ைத நிறுத்தி பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டு குறிப்பெடுக்கிறார். வெற்றி பெற்றதும் இந்த பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். அம்பாள் நகர், பூமகள் மெயின் ரோடு, ஹில்ட்டன் ஓட்டல், கங்கையம்மன் கோயில் தெரு, வண்டிக்காரன் தெரு, கலைமகன் நகர், ஜோதி நகர், அச்சுதன் நகர், ஸ்வர்ணம் தெரு, லட்சுமி நகர், பூந்தமல்லி சாலை, தனகோபால் தெரு, அருள் பிரகாசம் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திறந்த வெளி ஜீப்பில் நின்றவாறு வாக்கு சேகரித்தார்.

அவருக்கு ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்கள் வாக்கு தாமரைக்கு தான் என்று உறுதி அளித்தனர். தொடர்ந்து, காகிதபுரம் பகுதியில் நாராயணபுரம் ஏரிக்குச் செல்லும் வாய்க்காலில் மண்டி கிடந்த ஆகாயத் தாமரையை சுட்டிக்காட்டி பேசியவர், என்னை எம்பியாக தேர்ந்தெடுத்தால் இது போன்ற பிரச்சனைகளை ஒரே வாரத்தில் சரி செய்து விடுவேன் என்று அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

பிரச்சாரத்தின் போது, தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது: நான் ஆளுநராக இருந்தபோது ராஜ்பவனில் புகார் பெட்டி வைக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தேன். இந்த நடைமுறையைத் தென்சென்னை சட்டமன்ற அலுவலகங்களிலும் செயல்படுத்துவேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், குறிப்பிட்ட நாள்களில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அதை தீர்த்து வைப்பது தான் எனது முதல் வாக்குறுதி. வடசென்னைக்கு ஸ்டான்லி மருத்துவமனை, மத்திய சென்னைக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை போல் தென்சென்னைக்கு சோழிங்கநல்லூரில் இ.எஸ்.இ. மருத்துவமனை கொண்டுவர முழு முயற்சிகளில் ஈடுபடுவேன். பெரும்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை நீர் வடிகால் இல்லை. இந்த பகுதியில் 2 செ.மீட்டர் மழை பெய்தாலே தாங்காது. இந்த நிலையை மாற்றிக் காட்டுவேன்.

ஒரு மாற்று அரசியலை, ஒரு மாற்று அரசை கொண்டு வரவும், மோடி அரசின் நல்ல திட்டங்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னைக்கு கிடைப்பதற்கு வாக்காளர்கள் அனைவரும் தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள். தென்சென்னை தொகுதியில் உள்ள பெண்களை தொழில் முனைவோராக மாற்றிக்காட்டுவதே எனது சபதமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post தென்சென்னை தொகுதியில் உள்ள பெண்களை தொழில் முனைவோராக மாற்றிக் காட்டுவேன்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரசாரத்தில் சபதம் appeared first on Dinakaran.

Tags : South Chennai ,BJP ,Tamilisai Soundrarajan ,CHENNAI ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...