×

காங்கிரஸ் மீது குறை கூறும் மோடி அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?: கி.வீரமணி கேள்வி

சென்னை: காங்கிரஸ் மீது குறை கூறும் மோடி அரசு 10 ஆண்டு ஆட்சியில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கச்சத்தீவினை இலங்கைக்குத் தாரை வார்க்க காரணமானவர்கள் தி.மு.க.வினர் என்ற ஒரு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டினை, பிரதமர் மோடி ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க. கட்சி பிறப்பதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு இது.

காங்கிரஸ் – தி.மு.க. இரண்டின் மீதும் குற்றம் சுமத்தி பிரதமர் மோடி இப்போது பேசுவதன் நோக்கம் என்ன தெரியுமா?

பிஜேபி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் திசை திருப்ப கச்சத்தீவுப் பிரச்சினையை கையில் எடுக்கும் பிஜேபி

1. தற்போது பா.ஜ.க. மோடி தேர்தல் பத்திர மெகா ஊழல், வேலை கொடுக்காத கியாரண்டி ஜும்லாக்கள், விலைவாசி ஏற்றம் விண்ணைத் தொடும் அளவில் – விவசாயிகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அவர்களது போராட்டம், மாநில உரிமைகள், அரசு அமைப்புகள், அதிகாரத்தை துஷ்பிரயோகமாகப் பயன்படுத்தும் எதேச்சதிகாரம் போன்ற மக்களிடையே உள்ள முக்கிய வாழ்வாதார உரிமைப் பறிப்பு போன்றவற்றை தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியா – தி.மு.க. கூட்டணியினர் பேசாமல், மக்களுக்கு நினைவுபடுத்தாமல் இருக்கவே இப்படி ஒரு திசை திருப்பும் பா.ஜ.க.வின் தந்திரம் ஆகும்.

கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக தி.க. – தி.மு.க., போராட்டங்கள் – வழக்குகள் உண்டே!

2. முன்பு வந்து சொன்ன வாரிசு அரசியல், தி.மு.க.மீது ஊழல் குற்றச்சாட்டு போன்றவை தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் எடுபடவில்லை. ‘‘பொய் நெல்லைக் குத்தி சமைத்த ஊசிப்போன பொங்கல் போலானது’’ என்பதுதான் காரணம். எனவே (தி.மு.க.) இந்தியா கூட்டணியினர் ஓரளவு நேரத்தை மட்டுமே இந்த விவகாரத்தில் செலவிடுவது சாதுர்யமாகும். அடுத்து பிரதமர் மோடி கூற்றுக்கு அப்பட்டமான சாட்சி அன்றைய ஆட்சி – கச்சத்தீவை இலங்கைக்கு தந்ததைக் கண்டித்து, வன்மையான கண்டனக் குரலை தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. எழுப்பியது.

1974 ஜூன் 26 அன்று இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது முதல் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன. உடனடியாக ஜூன் 29 அன்றே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். ‘‘கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தைத் திருத்தி அமைத்து, தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கவேண்டும்‘’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. பிரதிநிதி மட்டுமே தீர்மானத்தில் கையெழுத்திடாமல் முன்னரே வெளிநடப்புச் செய்தார்; திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு முழுவதும் 1974, ஜூலை 14 அன்று கச்சத்தீவு ஒப்பந்தக் கண்டன நாள் கூட்டம் நடத்தியது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தி.மு.க. உறுப்பினர்கள் இரா.செழியன், எஸ்.எஸ்.மாரிசாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். தி.மு.க. உறுப்பினர்களும், ஏராளமான எதிர்க்கட்சியினரும் வெளிநடப்புச் செய்தனர். திராவிடர் கழகமும் பல ஊர்களில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டது. வாய்மூடி மவுனியாக வாளா இருக்கவில்லை. (நான் நீலகிரி மாவட்டத்தில் கலந்து கொண்டேன்).

‘‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’’ என்ற தலைப்பில் இத்தகைய பிரச்சினைகளை முன்னிறுத்தித் தமிழ்நாடு முழுவதும் பரப்புரைப் பயணங்களை நாம் மேற்கொண்டோம். தொடர்ந்து மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நம் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. 26.7.1997 இல் ‘‘தமிழக மீனவர் பாதுகாப்பு – கச்சத்தீவு மீட்புரிமை மாநாட்டினை’’ திராவிடர் கழகம் இராமேசுவரத்தில் நடத்தி, உரிமைக்குரல் எழுப்பியது. அம்மாநாட்டில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பழ.நெடுமாறன் முதலியோர் பங்குகொண்டனர்.

அம்மாநாட்டில் நாம் அறிவித்தபடி, அடுத்த மூன்று நாள்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

காங்கிரஸ் மீது குற்றம்சாட்டும் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தார்?

வாதத்திற்காக பிரதமர் மோடி கூற்றை ஏற்பதானாலும் நம்முடைய கேள்வி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவுற்று, பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக, ‘ரோடு ரோலர்’ மெஜாரிட்டியுடன் ஆளும் வாய்ப்பு பெற்ற போது, இவரது ஆட்சி கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை ஏதும் உண்டா? ஏன் மீட்டுத் தரவில்லை என்ற நம் கேள்விக்கு என்ன பதில்?

இலங்கைக்குக் கோடி கோடியாக நிதி உதவியை கடனாகவும், பொருளாதார சரிவிலிருந்து மீட்கவும் தந்த ‘விஸ்வகுரு’ என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஏன் அதைச் செய்யவில்லை? நான் ஆட்சிக்கு வந்தால் 60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி செய்த எல்லாத் தவறுகளையும் ஆறே மாதங்களில் சரி செய்வேன் என்று வாய்ப்பறை கொட்டி, வந்த பிரதமர் ஏன் செய்யவில்லை – செய்தீர்களா? என்ற நியாயமான கேள்விக்குப் பதிலென்ன?

கச்சத்தீவு விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக உளறும் மோடியின் பா.ஜ.க. 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும், கச்சத்தீவின் மீதும் பாசம் வந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதன் அதிகாரிகளும் என்ன சொல்லி வந்துள்ளனர்?

“இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லைப் பிரச்சினையும், அதன் விளைவாக கச்சத்தீவு மீதான இறையாண்மையும் தீர்க்கப்பட்ட விவகாரம் என்று வெளிவிவகார அமைச்சகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மீனவர் அமைப்பு ஒன்றின் மனுக்களுக்கு பதிலளித்து, அமைச்சகத்தின் துணைச் செயலாளர் விஷ்வேஷ் நேகி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.’’ (‘தி இந்து’ 2014 ஜூலை 02). அப்போது ஒன்றிய ஆட்சியில் இருந்தது மோடியின் அரசு தானே! பிரதமர் நரேந்திர மோடி அரசின் அதிகாரிகள் தானே இந்த பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தவர்கள். அட்டார்னி ஜெனரல் முகுல் ரகோத்கி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அமர்வில் 2014 ஆகஸ்ட் 26 அன்று தெரிவித்தது என்ன?

“கச்சத்தீவு மீண்டும் இந்தியாவுக்கு வேண்டுமென்றால், நாம் ஒரு போரில் தான் இறங்க வேண்டியிருக்கும்” என்று கூறவில்லையா?

2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்கிய பதில் இதோ: “இந்த விவகாரத்தில் கேள்விக்குரிய பகுதி (கச்சத்தீவு) ஒருபோதும் வரையறுக்கப்படாததால், இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பைக் கையகப்படுத்துவதோ அல்லது விட்டுக் கொடுப்பதோ இதில் இல்லை. ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இந்தியா-இலங்கை பன்னாட்டுக் கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது.” 2022 ஆம் ஆண்டில், இந்திய வெளியுறவு அமைச்சகம் (அப்போதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான்) மாநிலங்களவையில், “கச்சத்தீவு, இந்தியா-இலங்கை பன்னாட்டுக் கடல் எல்லைக் கோட்டின் இலங்கைப் பக்கத்தில் உள்ளது” என்று அறிவித்தது.

கடந்த 10 ஆண்டு காலத்தில் கச்சத்தீவு பிரச்சினை எழுப்பப்பட்ட போதெல்லாம், அது இலங்கையின் ஒரு பகுதி என்றும், முடிந்துபோன பிரச்சினை என்றும் பதில் சொல்லிவந்த இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், பிரதமர் மோடியின் கீழ் தானே இயங்கிவந்தது? உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று எல்லா தளங்களிலும் ஒரே குரலில் ஒலித்த பா.ஜ.க. அரசு, திடீரென 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ‘புதிதாகத் தோண்டி எடுத்த உண்மைகள்’ என்கிறதே? 10 ஆண்டுகள் பா.ஜ.க.வும் – மோடியும் உறக்கத்தில் இருந்தனரா?

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுக்கப்பட்டதா?

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படை, தொடர்ந்து கைது செய்து, இலங்கைச் சிறையில் அடைப்பதுடன், அவர்களது வாழ்வதாரமான படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்வது தொடர் கதையாகி வருவதையும், பல உயிர்கள் பலியாகி உள்ளதையும் தடுத்த நிறுத்தத் தவறியதேன் என்ற கேள்வியை அலட்சியப்படுத்தி, இந்தப் பழைய குற்றச்சாட்டினைக் தூசி தட்டி எழுப்புகிற வித்தையில் ஈடுபட்டுள்ளார் நமது பிரதமர்.

பிரதமருக்கு அதிகாரம் – ஆட்சிப் பெரும்பான்மை நிரம்ப உள்ள நிலையில், செய்ய வேண்டியதை செய்யத் தவறி விட்டு, தி.மு.க.மீது ஆதாரமற்ற பழி சுமத்துவது பிரதமர் பொறுப்புக்கு உகந்தது தானா? கச்சத் தீவைப்பற்றிக் கரிசனம் காட்டும் மோடி ஆட்சியில் அருணாசலப் பிரதேசத்தில் 2000 கி.மீ. சீனாவின் ஆக்ரமிப்பை என்ன செய்கிறது?

கச்சத்தீவு குறித்து தேர்தல் நேரத்தில் இப்போது திடீர்க் கரிசனம் காட்டும் பிரதமர் மோடி அரசு, வடகிழக்கு அருணாசலப்பிரதேசத்தில் 2000 கிலோ மீட்டர் ஆக்கிரமிக்கப்பட்டு, பல கிராமங்களில் சீனாவின் கொடி பறக்கிறது என்று பேசப்படுகிறதே – சீன மொழியில் பல பெயர்களும் சூட்டப்பட்டுள்ளதே – அதனை மீட்க, தட்டிக்கேட்க எடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு அடுத்த பேட்டியில் விடையைத் தருவீர்களா மோடிஜி என்பது தமிழ்நாட்டினரின் கேள்வி என்று கடுமையாக சாடியுள்ளார்.

The post காங்கிரஸ் மீது குறை கூறும் மோடி அரசு 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?: கி.வீரமணி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi government ,Congress ,Kachatya ,K. Veeramani ,Chennai ,Dravitha Corporation ,Kachativin ,Sri Lanka ,
× RELATED தோல்வி பயத்தில் பாஜகவும் மோடியும்: ப.சிதம்பரம் விமர்சனம்