×

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகும் ‘விவிபேட்’ வாக்குகள் எண்ணக் கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்பு

புதுடெல்லி: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகும் ‘விவிபேட்’ வாக்குகள் எண்ணக் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்பு அளித்துள்ளது. வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் போது, தான் பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை துல்லியமாகக் காட்டும் கருவியாக விவிபேட் இயந்திரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்தும் விவிபேட் இணைக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் காகித வடிவில் வாக்குச்சீட்டுகளாக மாறிவிடுவதால் அவற்றை பின்னர் திறந்து எண்ணும் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் அதற்கு இணையாக விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்டுள்ள சீட்டுகளும் சரியாக இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ளலாம்.

இதன்மூலம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்கவும் முடிகிறது. தற்போதைய நடைமுறைப்படி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு சரிபார்க்கப்படுகிறது. இந்நிலையில் அருண்குமார் அகர்வால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள ‘விவிபேட்’ இயந்திரங்களில் துண்டுச் சீட்டாக விழும் ஒப்புகைச் சீட்டுகளையும், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணும் போது எண்ண வேண்டும்.

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம், 6 மணி நேரத்தில் அனைத்து விவிபேட் இயந்திரங்களில் பதிவான சீட்டுகளையும் எண்ணி முடிக்க முடியும்’ என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மக்களவைத் தேர்தல் நடத்தப்படும் முன்னர் இந்த விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை மே 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘விவிபேட் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. லோக்சபா தேர்தல் தொடங்குவதற்கு முன் இந்த விஷயத்தை விசாரித்து முடிவு எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

The post அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகும் ‘விவிபேட்’ வாக்குகள் எண்ணக் கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காங்கிரஸ் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு