×

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு குழாய்கள் அமைக்கும் பணி மும்முரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.1300 கோடியில் 29 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு இணைப்பு வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக தூத்துக்குடி நகர பகுதிகளில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கான குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் அதிகமாக மாசை ஏற்படுத்தும் வாகன எரிபொருள் உபயோகம், சமையலுக்கு எல்பிஜி காஸ் உபயோகம், நிலக்கரி, விறகு போன்ற திட எரிப்பொருள் உபயோகம் போன்றவற்றை குறைத்து இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க ஒன்றிய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், நிலத்திற்கு அடியில் இருந்து கிடைக்கும் இயற்கை எரிவாயுவை சேமித்து, வீட்டுகாஸ் இணைப்பு, வாகன எரிபொருள், தொழிற்சாலை பயன்பாடு போன்றவற்றிற்கு பயன்படுத்திட கடந்த 2005ம் ஆண்டு நகர எரிவாயு விநியோக திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இத்திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஒன்றிய அரசு செயல்படுத்துகிறது. நாடு முழுவதும் சுமார் 450 மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல் வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் (ஐஓசிஎல்) மூலம் கடந்த 2022ம் ஆண்டு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி, கோவை, சேலம், மதுரை, தேனி, விருதுநகர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நகர இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை ஐஓசிஎல் நிறுவனம் ரூ.1,300 கோடியில் 29 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு திட்டமிட்டு பணிகளை செய்து வருகிறது. சுமார் 8 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களுக்காக தூத்துக்குடி அருகே பொட்டல்காடு கிராமத்தில் இயற்கை எரிவாயு விநியோக நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் இயற்கை எரிவாயுவை வழங்க பிரதான விநியோக குழாயை பதித்து வருகின்றனர். மேலும் நெல்லைக்கு கொண்டு செல்வதற்காக நெல்லை நெடுஞ்சாலையிலும் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை தூத்துக்குடி மாநகரில் முத்தையாபுரம் மற்றும் முள்ளக்காடு உள்ளிட்ட பகுதியில் குழாய் பதித்துள்ளனர்.

இந்த இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் வகையில், தெருக்களிலும் சிறிய அளவிலான விநியோக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது, வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கும் பணியை இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ஸ்பிக் நகர் மற்றும் முத்தையாபுரத்தில் உள்ள 5 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு 500 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பை சமையல் அறை வரை பொருத்தி முடித்துள்ளனர். இந்த வீடுகளுக்கு விரைவில், இயற்கை எரிவாயு நேரடியாக விநியோகம் செய்ய உள்ளனர். வீட்டிற்கு மிகவும் பாதுகாப்பான முறையில் குழாயில் வந்துசேரும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும்போது, எவ்வளவு உபயோகப்படுத்துகிறோமோ அதற்கு மட்டும் இரு மாதத்திற்கு ஒருமுறை பில் செலுத்த வேண்டும்.

மின் கட்டணத்தை செலுத்துவதுபோல், தங்களது செல்போனில் இருந்து கட்டணத்தை ஐஓசி நிறுவனத்திற்கு செலுத்திட வழிவகையுள்ளது. ஒவ்வொருவரின் வீட்டிலும் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அறிய மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வால்வுகளும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயற்கை எரிவாயு இணைப்புபெற பல விதமான பிளான்களை ஐஓசி அமல்படுத்தி இருக்கிறது. ரூ.6 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.1775, ரூ.618 என்ற 4 பிளான்களில், எதில் வேண்டுமானாலும் பொதுமக்கள் இணைந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தூத்துக்குடி மாநகர பகுதியில் நகர இயற்கை எரிவாயு இணைப்பு திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஐஓசிஎல் நிறுவனம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இன்னும் 3 மாத காலத்திற்குள் ஸ்பிக்நகர் பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் மேற்கொள்ள இருக்கிறோம்.

இதற்காக முதற்கட்டமாக 2 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. சப்ளை தொடங்கப்படும் முன், முறையாக அந்த வீடுகளில் அடுப்புகளுக்கு இணைப்பை கொடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது என்பதால், இயற்கை எரிவாயுவை மக்கள் விரும்புகின்றனர். அதனால், இத்திட்டத்தில் இலக்கை அடைந்திடுவோம், என்றனர்.

The post தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு இணைப்பு வழங்குவதற்கு குழாய்கள் அமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Nellai ,Tenkasi ,Kanyakumari ,Tuticorin ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது