×

2 மாதங்களுக்கு பின்பு இரவிகுளம் தேசிய பூங்கா திறப்பு: பயணிகளின் கூட்டம் அலை மோதியது


மூணாறு: இரவிகுளம் தேசிய பூங்கா இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலை மோதியது. தென்னகத்து காஷ்மீர் என்றழைக்கப்படும் மூணாறில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் இனப்பெருக்க காலம் என்பதால் பூங்கா பிப்.1 முதல் மார்ச் 31 வரை மூடபட்டது. வரையாடுகளின் பிரசவம் முடிவுக்கு வந்ததால் இரவிகுளம் தேசிய பூங்கா இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு, பூங்காவிற்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

முதல் நாளான நேற்று 1,100 பயணிகள் வரையாடுகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள். புதிதாக பிறந்த வரையாடு குட்டிகளை பார்த்து, செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு நாளில் அதிகபட்சமாக 2,880 பேருக்கு மட்டுமே ராஜமலையை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படும் இங்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.200, சிறுவர்களுக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது.

பேட்டரி கார்களில் இயற்கை சூழலில் அமைத்துள்ள நடைபாதையில் வலம் வந்தும், பயணிகள் வரையாடுகளை ரசித்தும், செல்பி, போட்டோக்கள் எடுத்தும் இங்கு பொழுதைக் கழிக்கலாம். கோடை வெயில் அதிகமாக உள்ள நிலையில், இதமான சூழலில் இயற்கையை ரசித்து மகிழலாம் என்பதால் இங்கு வந்ததாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.

The post 2 மாதங்களுக்கு பின்பு இரவிகுளம் தேசிய பூங்கா திறப்பு: பயணிகளின் கூட்டம் அலை மோதியது appeared first on Dinakaran.

Tags : Iravikulam ,National Park ,Munnar ,Iravikulam National Park ,South Kashmir ,
× RELATED முக்குருத்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது!!