×

அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழக குழந்தை 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு.. கண்ணீர் மல்க உறவினர்கள் வரவேற்பு..!!

சென்னை: அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழ்நாட்டு குழந்தை பஞ்சாபி தம்பதியினருக்கு தத்து கொடுக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு பின்னர், குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்க உதவிய தமிழ்நாடு அரசுக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ்செல்வி, பிரவீன் குமார் தம்பதியினர் அமெரிக்காவின் மிஸிஸிட்டி மாகாணத்தில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தம்பதியினரின் 2 வயது மகன் விஷ்ரூத்தை அமெரிக்க அரசு பஞ்சாபை சேர்ந்த ஒரு தம்பதிக்கு தத்து கொடுத்தது.

இதனை அறிந்த குழந்தையின் சித்தி அபிநயா உடனடியாக அமெரிக்கா சென்று குழந்தையை தத்தெடுத்த பஞ்சாபி தம்பதியினர் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை நடத்துவதற்கு அமெரிக்க தமிழ்ச்சங்கம், தமிழ் ஆர்வலர்கள் பலரும் உதவி செய்துள்ளனர். இதனிடையே அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தையை மீட்டு உறவினர்களிடம் தேடி ஒப்படைக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க அயலக தமிழ் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து அயலக தமிழ் நல வாரிய பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படியில் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 2 ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தை தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டது. அமெரிக்காவில் மறைந்த பிரவீன் குமாரின் பெற்றோர் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்து மீட்கப்பட்ட 2 வயது பேரனை அன்போடு வரவேற்று கண்ணீர் மல்க அரவணைத்துக் கொண்டனர்.

The post அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த தமிழக குழந்தை 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு.. கண்ணீர் மல்க உறவினர்கள் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nadu ,America ,CHENNAI ,US ,Tamil Nadu government ,Praveen ,Tamilnadu ,
× RELATED அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி...