×

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கு!: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையில் ஆட்சியர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை பல்வேறு சோதனைகள் நடத்தி, பல ஆவணங்களை பறிமுதல் செய்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன் ஆஜராகும்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி வேலாயன் திரிவேதி தலைமையிலான அமர்வு விசாரித்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் வேலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பும் பட்சத்தில், அவர்கள் ஆஜராக வேண்டும் என கடந்த முறை உத்தரவிட்டிருந்தது. இதன்படி மார்ச் 1ம் தேதி அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அந்த சம்மனுக்கு அவர்கள் ஆஜராகவில்லை. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் மதித்திருக்க வேண்டாமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, மாவட்ட ஆட்சியர்களிடம் தரவுகள் இல்லாத போது ஆஜராவதில் பயனில்லை என்று வாதிட்ட தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர். 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த சம்மனை சற்று தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அமலாக்கத்துறை சம்மனுக்கு திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் வரும் 25ம் தேதி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர்களின் பிரதிநிதிகள் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கு!: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு