தேனி: தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சிறு டீக்கடைக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட சோழவந்தான், உசிலம்பட்டி என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தேனி பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடக்க உள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, அமமுக , நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், வேட்பாளர்களுக்கு ஆதரவாக தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் இறங்கியுள்ளனர்.
மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பங்குனி மாதம் என்பதால் காலையிலேயே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. இதனால் வேட்பாளர்கள், தொண்டர்கள் அடிக்கடி சோர்வடைகின்றனர். இதனால் அவர்களுக்கு டீ, காபி அருந்த வேண்டியுள்ளது. மேலும் வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டச் செல்லும் பகுதிகளில் அந்தந்த பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளுகின்றனர். இதனால் அனைத்துப் பகுதியிலும் உள்ள டீக்கடைகளில் வியாபாரம் களைகட்டத் தொடங்கி உள்ளது.
மேலும், வேட்பாளர்கள் இல்லாமலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தனியாக வீடு, வீடாக ஓட்டு கேட்டுச் செல்வதும் தொடங்கியுள்ளது. இதுபோன்று ஓட்டு கேட்டு வரும் கட்சித் தொண்டர்களுக்கு அந்தந்த பகுதி நிர்வாகிகள் அப்பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் டீ, வடை என வாங்கித் தருவதால், சிறு டீக்கடைகளில் வியாபாரம் அதிகரித்துள்ளது. இன்னும் 15 நாட்களுக்கு பிரசாரம் தொடரும் என்பதால் சிறுடீக்கடைக்காரர்கள் குஷியில் உள்ளனர்.
The post தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’ appeared first on Dinakaran.