×

ஊட்டி ஏரி கரையோரத்தில் உள்ள நடைபாதை சீரமைப்பு பணி தீவிரம்: கோடை சீசனுக்குள் முடிக்க திட்டம்

ஊட்டி: ஊட்டி ஏரியின் கரையோரத்தில் உள்ள நடைபாதை சீரமைப்பு மற்றும் தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டமாக உள்ளதால் இங்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை பல்வேறு வளர்ச்சி பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆண்டிற்கு ஆண்டு இங்குள்ள சுற்றுலா தலங்களை மெருகேற்றும் பணியில் அரசு துறைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலை ஓரத்தில் இருந்த நடைபாதைகள் பழுதடைந்து காணப்பட்டன. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபாதையில் இருந்த பழைய டைல்ஸ்கள் அகற்றப்பட்டு புதிதாக டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு வருகிறது. மேலும், நடைபாதை ஓரங்களில் அலங்கார தடுப்பு வேலிகள் மற்றும் அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்: படகு இல்லம் செல்லும் சாலையோரங்களில் உள்ள (ஏரியின் கரையோரங்களில்) நடைபாதை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வரும் கோடை சீசனுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதனால், இம்முறை கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல புதிய அனுபவம் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றனர்.

படகு இல்லம் செல்லும் நடைபாதையில் தற்போது தெரு விளக்குகள் அதிகளவு எரியாத நிலையில், இரவு நேரங்களில் இவ்வழித்தடத்தில் செல்ல சுற்றுலா பயணிகள் அச்சப்பட்டனர். தற்போது சாலையோரங்களில் அலங்கார தெரு விளக்குகள் அமைக்கப்படும் நிலையில், இரவு நேரங்களில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த நடைபாதையில், வாக்கிங் மேற்கொள்ள முடியும்.

The post ஊட்டி ஏரி கரையோரத்தில் உள்ள நடைபாதை சீரமைப்பு பணி தீவிரம்: கோடை சீசனுக்குள் முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty lake ,Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஊட்டி மலை ரயில் ரத்து