×

சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தரமான மாம்பழ வரத்து தாமதம்: மூடிக்கிடக்கும் மண்டிகள்


தர்மபுரி: சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தரமான மாம்பழம் சந்தைக்கு வர தாமதம் ஆவதையொட்டி, தர்மபுரியில் மாம்பழ மொத்த வியாபார மண்டிகள் மூடிக்கிடக்கின்றன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேரிலும், தர்மபுரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேரிலும் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. ஆனால் உயர் ரக மாம்பழங்கள் இன்னும் சந்தைக்கு விற்பனைக்கு வரவில்லை. மாம்பழ சீசன்களில் நூற்றுக் கணக்கான மாங்காய் மண்டிகள் திறந்திருக்கும். தற்போது சீசன் தொடங்கியும், மாங்காய் அறுவடை முழுமையாக தொடங்கவில்லை. இதனால் மண்டிகள் இன்னும் திறக்காமல் உள்ளது.

கடும் வெயிலால் மாங்காய் பிஞ்சுகள் மாமரத்தில் இருந்து கருகி கீழே விழுகின்றன. கொத்து கொத்தாக தொங்க வேண்டிய மாமரத்தில், விளைச்சல் குறைந்து ஒன்று இரண்டுமாக மாங்காய் தொங்குகிறது. இந்த பருவத்தில் கோடை மழை பெய்தால், பிடித்திருக்கும் பிஞ்சு மாங்காய்கள் பருத்து தரமான மாங்காய்களாக வர வாய்ப்புள்ளது. மழை பெய்யவில்லை என்றால், இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் பாதிக்கப்படும். மாம்பழம் விலை உயர வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மாம்பழ வியாபாரிகள் கூறியதாவது: மாம்பழம் சீசன் மார்ச் முதல், ஜூன் மாதம் வரை இருக்கும். பருவமழை பொய்த்து, வறட்சி ஏற்பட்டதால், மாமரத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல் மாங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சந்தையில் மாம்பழம் விலை அதிகமாக இருக்கும். தற்போது செந்தூரா ரக மாம்பழங்கள் அறுவடை தொடங்கியுள்ளது.

ஆனால் மாம்பழம் ஆகுவதற்கான தரமான மாங்காய்களாக அது இல்லை. வெயிலின் வெப்பத்தில் வெம்பின மாங்காய்களாக உள்ளன. ஒரு கிலோ செந்தூரா ₹60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாங்காய்கள் சரியானபடி அறுவடை செய்யப்படாததால், மாங்காய் மண்டிகள் மூடியே இருக்கின்றன. கடந்த ஆண்டு இதே சமயத்தில் அறுவடை தொடங்கிய மாங்காய் மண்டிகள் சுறுசுறுப்பாக இயங்கின. தற்போது மாங்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் மாங்காய் மண்டிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது கடைகளில் மாங்காய்கள் ஊறுகாய், ஜூஸ் போட விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாங்காய்கள் வெப்பத்தின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவைகள். இப்போது மழை பெய்தால், மரத்தில் உள்ள மாங்காய்கள் நல்ல தரமான மாம்பழமாக வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post சுட்டெரிக்கும் கோடை வெயிலால் தரமான மாம்பழ வரத்து தாமதம்: மூடிக்கிடக்கும் மண்டிகள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Tamil Nadu ,Krishnagiri ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் எதிரொலி!: சேலம் மல்கோவா...