×

மறக்குமா நெஞ்சம்; இதே நாளில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி!

1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை வென்ற பின் மீண்டும் அதை கையில் ஏந்த இந்திய அணி 28 ஆண்டுகள் காத்திருந்தது. கபில்தேவிற்கு பின் இந்திய அணியில் பலம்வாய்ந்த கேப்டன்கள் வந்த போதும் உலகக்கோப்பை என்பது கனவாகவே இருந்தது. ரசிகர்களின் 28 ஆண்டுக்கால ஏக்கத்திற்கு ஒற்றை சிக்ஸரால் முற்றுப்புள்ளி வைத்து வான்கடே மைதானத்தை அதிரவிட்டு உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக இந்திய அணிக்கு பெற்று கொடுத்தார் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2011 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது.

நாக் அவுட் போட்டிகளில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. தோனி தலைமையிலான இந்திய அணியும், குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியும் ஏப்ரல் 02, 2011ம் ஆண்டு வான்கடே மைதானத்தில் இறுதி யுத்தத்தில் சந்தித்தனர். வான்கடே மைதானம் முழுவதும் நீல நிறத்தில் ஜொலித்து காட்சியளித்தது. முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இலங்கை அணியின் தொடக்க வீரர் உப்புல் தாரங்காவை இந்திய வேகப்புயல் ஜாகீர் கான் 7வது ஓவரில் வீழ்த்தினார்.

மற்றொரு தொடக்க வீரர் தில்சானை நீண்ட நேரம் களத்தில் விளையாட விடமால் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பெவிலியன் திரும்ப வைத்ததார். கேப்டன் சங்கக்கார மற்றும் ஜெயவர்தனே 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் அந்த கூட்டணியை யுவராஜ் சிங் நிலைக்கவிட வில்லை. சங்கக்கார 48 ரன்னில் அவுட்டானார். இலங்கை அணியில் அடுத்தடுத்து வந்த வீரர்களின் பங்களிப்பால் 274 ரன்களை குவித்தது. ஜெயவர்தனே இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி 13 பவுண்டரிகள் உடன் 103 ரன்கள் குவித்தார்.

வான்கடே மைதானத்தில் 274 ரன்களை சேஸ் செய்வது கடினமான இலக்காகவே இருந்தது. இலங்கை அணியின் ஆக்ரேஷமான பந்துவீச்சுக்கு இந்தியா ஈடுகொடுக்க முடியுமா என்ற பதற்றமும் ரசிகர்கள் நெஞ்சில் இருந்தது. நினைத்தது போலவே இலங்கை அணி ஆரம்பமே தனது அட்டாக்கிங் பவுலிங்கை வெளிப்படுத்தியது. நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா பந்துவீச்சில் தொடக்க வீரர் சேவாக் டக் அவுட்டாகி வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதிப்படுத்தினார். அதற்கு அடுத்த சில பந்துகளில் சச்சின் டெண்டுல்கரையும் பெவிலியன் திரும்ப செய்தார் மலிங்கா.

இளம்நாயகனாக களமிறங்கிய விராட் கோலி, கவுதம் கம்பீர் உடன் நிதானமாக விளையாடி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். இந்த ஜோடி 83 ரன்கள் குவித்த நிலையில் தில்சன் பந்துவீச்சில் வெளியேறேினார் விராட் கோலி. விராட் கோலி அவுட்டானதும் அடுத்து எப்போதும் யுவராஜ் சிங் களமிறங்கும் வரிசையில் யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக கேப்டன் மகேந்திர சிங் தோனி இறங்கினார்.

தோனி – கம்பீர் இருவரும் இலங்கை பந்துவீச்சை சிதறவிட்டனர். சதம் நெருங்கிய கவுதம் கம்பீர் 97 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் மகேந்திர சிங் தோனி 91 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். வான்கடே மைதானத்தில் 49 வது ஓவரில் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த காட்சிகள் இன்றும் கிரிக்கெட் ரசிகர்கள் நெஞ்சில் நீங்காமல் இடம்பிடித்துள்ளது.

 

The post மறக்குமா நெஞ்சம்; இதே நாளில் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி! appeared first on Dinakaran.

Tags : Dhoni ,World Cup ,Kapil Dev ,Dinakaran ,
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...