×

வாகனத்திற்கு அனுமதி பெறாததால் தேமுதிக வேட்பாளர் பிரசாரம் ரத்து: அதிகாரிகள், காவலர்களிடம் கூட்டணி கட்சிகள் ரகளை

ஆவடி, ஏப். 2: அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரசார வாகனத்திற்கு அனுமதி பெறாததால் முதல் நாளே துவங்கும் முன்பே ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சியில் தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், முன்னாள் அமைச்சர் அப்துல்ரஹீம், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன் தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

பிரசாரத்தின் முதல் நாளான நேற்று மற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் வராததால் கூட்டணி கட்சியினர்களுக்கு இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில் நேற்று காலை 7 மணி அளவில் சாமி தரிசனம் செய்த பின் பிரசாரத்தை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், பிரசார வாகனம் நீண்ட நேரமாக வராததால் வேட்பாளர் கூட்டணி கட்சியினர் டீக்கடையில் நின்று டீயை சாப்பிட்டு புலம்பிக் கொண்டிருந்தனர். அதேபோல், பிரசாரத்திற்கு 100க்கும் குறைவானவர்களே வந்ததால், திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக நிலைமை பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக கட்சியினர் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து, நீண்ட நேரம் கழித்து மூன்று வாகனங்கள் பிரசாரத்திற்காக வந்தது. அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி தர் மற்றும் காவலர் சுப்பிரமணி பிரசார வாகனத்திற்கு அனுமதி பெற்றுள்ளீர்களா என கேள்வி கேட்டனர். அனுமதி பெற்றுள்ளோம், சிறிது நேரத்தில் அனுமதி காட்டுகிறோம் என்று கூறி நீண்ட நேரமாக வாகனங்களை சாலையில் நிறுத்தியதால், ஆரிக்கம்பேடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர்.

நீண்ட நேரமாகியும் அனுமதி சீட்டு காட்டாததால் தேர்தல் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாகனத்தை எடுக்கக் சொல்லி அறிவுறுத்தினர். இதனால், அத்திரமடைந்த அதிமுகவினருக்கும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவலர்களுக்கும் இடையே ரகளை உருவானது. மேலும், அனுமதி இல்லாததால் பிரசார வாகனம் திருப்பி அனுப்பப்பட்டது. உரிய முன்னேற்பாடு செய்யாததால், அதிருப்தி அடைந்த முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம் மற்றும் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் அங்கிருந்து சென்றனர். முதல் நாளான நேற்று பிரசாரம் துவங்கும் முன்பே ரத்து செய்து, தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் கட்சியினர் இடையே பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

The post வாகனத்திற்கு அனுமதி பெறாததால் தேமுதிக வேட்பாளர் பிரசாரம் ரத்து: அதிகாரிகள், காவலர்களிடம் கூட்டணி கட்சிகள் ரகளை appeared first on Dinakaran.

Tags : DMD ,Allies ,Avadi ,DMDK ,AIADMK alliance ,Tiruvallur ,DMUDIKA ,Dinakaran ,
× RELATED நடிகரும் தேமுதிக தலைவருமான...