×

மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

திருவள்ளூர், ஏப்.2: நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான த.பிரபுசங்கர், திருவள்ளுர் நாடாளுமன்ற (தனி) தொகுதி பொது பார்வையாளர் அபு இம்ரான், மாவட்ட எஸ்பி ஆர்.நிவாச பெருமாள் ஆகியோர் அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் இயந்திர இருப்பு அறையில் இருந்து பட்டியலின்படி வழங்கப்பட்டன.

அதன்படி திருவள்ளூர் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் 14 பேர் மட்டுமே போட்டியிடுவதால் ஏற்கனவே அனுப்பிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதுமானதாக உள்ளது. ஆனால் வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 35 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் வட சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே 311 வாக்குப்பதிவு மையங்களுக்கு 373 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மேலும் 746 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல் பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 31 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே 440 வாக்குப்பதிவு மையங்களுக்கு 528 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே 350 வாக்குப்பதிவு மையங்களுக்கு 420 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. மேலும் மதுரவாயல் தொகுதிக்கு 526 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அம்பத்தூர் தொகுதிக்கு 420 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டன. அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் 26 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு ஏற்கனவே 330 வாக்குப்பதிவு மையங்களுக்கு 396 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மேலும் அங்கு 396 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும், வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இருப்பு அறை, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, இருப்பு அறையில் இருந்து சீரற்றமயமாக்கல் செய்யப்பட்ட பட்டியலின்படி வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் திருவொற்றியூர், பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட மதுரவாயல், அம்பத்தூர் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பயிற்சி கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், வருவாய் கோட்டாசியர் தீபா, உதவி ஆணையர் (கலால்) ரங்கராஜன், தேர்தல் வட்டாட்சியர் சோமசுந்தரம், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Dr. ,Prabhu Shankar ,Tiruvallur Parliament (Separate) Constituency ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த...