×

அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ₹30 லட்சம் மோசடி கம்பெனி உரிமையாளர் கைது

வளசரவாக்கம், ஏப். 2: திருமங்கலத்தில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தம்பதியிடம் ₹30 லட்சம் மோசடி செய்து, ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த தனியார் நிறுவன உரிமையாளரை சாலிகிராமம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (40). இவரது கணவர் கணேஷ்குமாரின் நண்பர் ஹரி வெங்கடேஸ்வரன் (40), சாலிகிராமம் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் 1.5 சதவீதம் வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அதன்பேரில், 2019ம் ஆண்டு தனது கணக்கில் இருந்து திவ்யா ₹20 லட்சத்தை ெகாடுத்துள்ளார். அதன் பின்னர் 3 மாதங்கள் வரை அந்த பணத்திற்கு வட்டி கொடுத்துள்ளனர். இதனையடுத்து, மேலும் பணத்தை முதலீடு செய்வதற்கு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனால் மீண்டும் ₹10 லட்சத்தை திவ்யா முதலீடு செய்துள்ளார். அதன் பின்னர் வட்டி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து செல்போன் மூலமாக தொடர்பு கொண்டால் சரியான பதில் இல்லை. நேரடியாக சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் சென்று பணத்தை கேட்டபோது, திருப்பித் தர முடியாது என்றும், உங்களால் என்ன செய்ய முடிமோ செய்து கொள்ளுங்கள் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, ₹30 லட்சம் மோசடி செய்த ஹரி வெங்டேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கு இணை ஆணையர் அலுவலகத்தில் திவ்யா புகார் அளித்தார். அதன்பேரில், கடந்த வருடம் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ஹரி வெங்கடேஸ்வரனை கைது செய்யச் சென்றனர். இதையறிந்த அவர், தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். இதனையடுத்து ஹரி வெங்கடேஸ்வரனை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சாலிகிராமம் பகுதிக்கு அவர் வரவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருமங்கமலம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் நேற்று சாலிகிராமம் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஹரி வெங்கடேஸ்வரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ₹30 லட்சம் மோசடி கம்பெனி உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Valasaravakam ,Tirumangalam ,Thirumangalam ,Chennai ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...