×

தனிநபர் நலன் பாதிக்கக்கூடாது அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடிக்கு சந்திரசூட் திடீர் எச்சரிக்கை: தேசத்திற்கு எதிரான வழக்குகளில் அதிக கவனம் செலுத்த அறிவுரை

புதுடெல்லி: நாட்டின் முக்கிய விசாரணை அமைப்புகள் தேசத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கி உள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அமலாக்கத்துைறை, சிபிஐ, வருமானவரித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ரூ.3500 கோடிக்கு மேல் அபராதம் விதித்து வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸ் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நாட்டில் உள்ள முக்கிய விசாரணை அமைப்புகள் தேச பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திடீரென அறிவுரை வழங்கி உள்ளார். சிபிஐயின் முதல் இயக்குனர் டிபி கோஹ்லியின் 20வது ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்புகள் மிகவும் மெல்லிய அளவில் பரவிவிட்டன. அவை தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பம் எவ்வாறு குற்றப் பரப்பை மாற்றியுள்ளது என்பதையும், விசாரணை அமைப்புகள் இப்போது எந்த அளவு சிக்கலான சவாலை எதிர்கொள்கிறது என்பதையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நேரத்தில் ஊழல்-எதிர்ப்பு புலனாய்வு அமைப்பாக அதன் பங்கிற்கு அப்பால் பல்வேறு வகையான குற்றவியல் வழக்குகளை ஆராய சிபிஐ அதிகளவில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது சிபிஐயின் முக்கிய குறிக்கோளையும் தாண்டி அதன் மேல் மிகப்பெரிய பொறுப்பை சுமத்துகிறது. எனவே தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்திற்கு எதிரான பொருளாதார குற்றங்கள் தொடர்பான குற்றங்கள் குறித்து மட்டுமே முக்கிய விசாரணை அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். புலனாய்வு அமைப்புகள் சோதனை நடத்துவதும், சோதனையில் கைப்பற்றும் நடவடிக்கைகளும், தனிமனித உரிமைகளுக்கு இடையே நுட்பமான சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.

குற்றவியல் நீதித்துறையில் இது மிகவும் முக்கியம். இது ஒரு நீதியான, நியாயமான சமூகத்தின் முக்கிய அம்சம். இந்த சமநிலையின் இதயம் என்பது உரிய செயல்முறையை நிலைநிறுத்த வேண்டிய அவசியத்தை கொண்டு உள்ளது என்பதுதான் இதில் முக்கியமானது. ஏனெனில் முக்கிய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தும் போது தனிப்பட்ட நபர்களின் சாதனங்களை தேவையற்ற வகையில் பறிமுதல் செய்வதையும் தற்போது காண முடிகிறது. எனவே தான் விசாரணைக்கு தேவயைான அவசியம் மற்றும் தனி நபர்களின் பாதுகாக்கப்பட்ட தனியுரிமை இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதில் கண்கூடாக தெரிகிறது.

எனவே விசாரணை அமைப்புகள் தாங்கள் முக்கியமாக விசாரிக்க வேண்டிய வழக்குகளை தீர்மானமாக முடிவு செய்து தேர்வு செய்ய வேண்டும். நாடு முழுவதும் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் மிகவும் மெல்லியதாக விசாரிப்பதற்குபதிலாக, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், பொது ஒழுங்கை அச்சுறுத்தும் குற்றங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குற்றத்தின் பரப்பு இப்போது முன்எப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. எனவே சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன புலனாய்வு திறனை உருவாக்க வேண்டும். சைபர் குற்றம் மற்றும் டிஜிட்டல் மோசடி முதல் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சட்டவிரோத நோக்கங்களுக்காக சுரண்டுவது வரை அனைத்தும் அதிகரித்துள்ளது. எனவே குற்றச்செயல்களில் மாற்றத்தை கண்காணித்து, அதை புலனாய்வு அமைப்புகள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

The post தனிநபர் நலன் பாதிக்கக்கூடாது அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடிக்கு சந்திரசூட் திடீர் எச்சரிக்கை: தேசத்திற்கு எதிரான வழக்குகளில் அதிக கவனம் செலுத்த அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chandrachud ,Enforcement ,CBI ,New Delhi ,Chief Justice ,Lok ,Sabha ,Chandrachut ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...