×

கச்சத்தீவுக்காக 10 ஆண்டு என்ன பண்ணாரு… மோடி நாடகம் மக்களிடம் எடுபடாது: முத்தரசன் பளீச்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வேலூர் பாகாயம், ஓட்டேரி, விருப்பாட்சிபுரம், பலவன்சாத்து குப்பம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பின்னர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று. 1972ம் ஆண்டு கச்சத்தீவை இந்திரா காந்தி பிரதமராக இருக்கும்போது, இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவை பற்றி பேசுகிற பிரதமர் பாஜவினர் கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டு இருக்கலாம். 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்காமல் அதை விட்டுவிட்டு இன்று பேசுவது மலிவான முறையில் வாக்குகளை பெற மிக மோசமான முறையாகும்.

தமிழ்நாட்டில் ஒன்று நள்ளிரவு கூட்டணி, ஒன்று கள்ளக் கூட்டணி இந்த 2 கூட்டணியும் தமிழக மற்றும் புதுச்சேரி மக்கள் நிராகரிப்பார்கள். இன்றைக்கு போதை பொருளை காரணம் காண்பித்து அதை ஒரு அரசியல் ஆக்கி பிரசாரம் செய்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற நட்பாசையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. மக்கள் ஒன்றும் ஏமாந்தவர்கள் அல்ல. நேற்று என்ன செய்தார் மோடி என்பது மக்களுக்கு தெரியும். ஆகவே இன்றைக்கு போடுகின்ற நாடகங்களை கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை முடக்கியுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.11 கோடியும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.11 கோடியும் வருமான வரித்துறை அபராதம் விதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பாஜ முயற்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் “இந்தியா” கூட்டணி சார்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செல்வராஜ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ,அதன் மூலம் வாக்குகளை பெரும் முயற்சியில் பாஜவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இன்று (நேற்று) காலை 9மணி அளவில் நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் இயங்கி வரும் சாய் டொமஸ்டிக் கேஸ் சப்ளையர் மற்றும் நீலா மேல வடம்போக்கி தெருவில் இயங்கி வரும் பார்வதி இந்தியன் கேஸ் நிறுவனத்தில், வாடிக்கையாளர்கள் பெரும் கூட்டமாக நிற்பதாக செய்திகள் வந்தது.இது குறித்து விசாரித்த போது, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் கார்டுகளை தங்கள் கேஸ் இணைப்புகளுடன் இணைக்க வேண்டும் .அவ்வாறு இணைத்தால், உடனடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு ரூபாய் 300 மானியமாக ஒன்றிய பாஜ அரசிடம் இருந்து கிடைக்கும் என்று கூறப்பட்டதாக, வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். எனவே, இது குறித்து உடனடியாக தேர்தல் ஆணையம் நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு, இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

* கூட்டணிக்காக ஓப்பனாக ஏலம் விடும் கட்சி தேமுதிக: அமைச்சர் ‘கலாய்’
கடலூர் சட்டமன்ற தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நடந்தது. இதில், அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது: அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிட ஆட்கள் இல்லை என்ற நிலையை இந்த தேர்தல் மூலம் உருவாக்க வேண்டும். அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் நிற்க அஞ்ச வேண்டும். தேமுதிக கட்சி கூட்டணிக்காக ஓப்பனாக ஏலம் விடுகின்றனர். அந்த கட்சிக்காரர்களை அடமானம் வைக்கும் கட்சி அது. தேமுதிக டிமாண்ட் பேசும் கட்சி. இது கேவலமாக இல்லையா அவர்களுக்கு மக்கள் சம்மட்டி அடி அடிக்க வேண்டும். அவர்களுக்கென்று ஒரு கொள்கை வேண்டாமா? அதிமுக, பாஜ என பல கட்சிகளிடம் பேரம் பேசுகின்றனர். தேமுதிக போன்று பேரம் பேசும் கட்சிகளுக்கெல்லாம் மக்கள் சம்மட்டி அடி அடிக்க வேண்டும். அவர்கள் நீலி கண்ணீர் வடித்தால் மக்கள் வாக்களித்து விடுவார்களா?.
இவ்வாறு அவர் கூறினார்.

* பொய் பேசுவதே மோடி வேலை: நடிகை ரோகிணி விளாசல்
மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து நடிகை ரோகிணி நேற்று மதுரை ஜெய்ஹிந்த்புரம், திடீர் நகர், சொக்கலிங்க நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எளிய மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும். 400 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் என பிரதமர் மோடி கூறினாலும், யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமென தீர்மானிக்கப் போவதும் மக்கள் தான். தமிழகத்திற்கு வாக்கு கேட்பதற்காக மட்டும் வரும் மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது ஒரு பைசா கூட தரவில்லை.
எங்கே சென்றாலும் கேமராக்கள் முன்பிருந்து பேசுவதையும், பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ள மோடியை, மக்கள் பார்த்து கொள்வார்கள். சிஏஏ சட்டத்திருத்தத்தால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நடைபெறும் மக்களவைத் தேர்தல் மிக முக்கியமானது. நாட்டின் ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.

* கச்சத்தீவு விவகாரம் கற்பனையில் சரித்திர சண்டை போடும் பாஜ: கார்த்தி சிதம்பரம் பொளீர்
சிவகங்கையில் நடைபெற்ற மகளிர் காங்கிரஸ், திமுக மகளிரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரித்திர சண்டை போடும் பழக்கம் உள்ளவர்கள் பாஜவினர். முதலில் பாபர் மீது சண்டை, அவுரங்கசீப் மீது சண்டை, மூன்றாவதாக கிழக்கிந்திய கம்பெனி அடுத்தடுத்து பல பேரிடம் கற்பனையில் சரித்திர சண்டையிட்டனர்.
கடைசியாக ஜவஹர்லால் நேரு மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் சரித்திர சண்டையில் மூழ்கியிருக்கிறார்கள். நடைமுறையில் உள்ள பிரச்னைகளை பேசுவதே இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் இரண்டு நாடுகளுக்கும் இடையே 1974ல் நடந்த கச்சத்தீவு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின்போது, இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்த சுமார் 6 லட்சம் தமிழர்கள் குடியுரிமை பெற்றார்கள். ஆனால், பாஜ ஆட்சிக்கு வந்தபிறகு சீனா இந்தியாவுக்குள் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் ஊடுருவி சாலை போட்டு விட்டார்கள். இதை பற்றி பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, ராணுவ அமைச்சரோ, வெளியுறவு துறை அமைச்சரோ வாய் திறக்கவில்லை. பல்வேறு பிரச்னைகளை திசை திருப்புவதற்காக உடன்பாடு செய்யப்பட்ட கச்சத்தீவு பிரச்னையை பேசி வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

The post கச்சத்தீவுக்காக 10 ஆண்டு என்ன பண்ணாரு… மோடி நாடகம் மக்களிடம் எடுபடாது: முத்தரசன் பளீச் appeared first on Dinakaran.

Tags : Modi ,Mutharasan Baleech ,DMK ,Kathir Anand ,Vellore ,Communist Party of India ,State Secretary ,Mutharasan ,Vellore Bagayam ,Otteri ,Vishdachipuram ,Palavansathu Kuppam ,Mutharasan Bleech ,
× RELATED சொல்லிட்டாங்க…