×

ஐடி நோட்டீஸ் ஒருதலைப் பட்சமானது பாஜவுக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதிக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

புதுடெல்லி: ‘காங்கிரசுக்கு அனுப்பப்பட்ட வருமான வரித்துறை நோட்டீஸ் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை’ என கண்டித்துள்ள பிரியங்கா காந்தி, ‘பாஜவுக்கு ஏன் ரூ.4,600 கோடி அபராதம் விதிக்கவில்லை?’ என கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில் நேற்று கூறியிருப்பதாவது: காங்கிரசுக்கு ஏன் வருமான வரித்துறை ரூ.3,567 கோடி அபராதம் விதித்தது? காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டு என்ன? 1994-95 மற்றும் 2014-15 முதல் 2016-17ம் ஆண்டுகளில் சில தலைவர்கள், தொண்டர்கள் கட்சிக் கணக்கில் ரொக்கமாக டெபாசிட் செய்துள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் ஏற்கனவே வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தி விட்டோம். ஆனாலும், இந்த தகவல்களை காங்கிரஸ் தரவில்லை என தன்னிச்சையான குற்றச்சாட்டை அரசு சுமத்துகிறது.

இதற்காக வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் கணக்கில் இருந்து ரூ.135 கோடியை எடுத்துக் கொண்டது. அதோடு ரூ.3,567 கோடி அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியது. கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இப்போது இன்னொரு உண்மையை பாருங்கள், தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள பாஜவின் அறிக்கைப்படி, 2017-18ம் ஆண்டில் யார், எந்த ஊர் என எந்த தகவலையும் தெரிவிக்காமல் 1,297 பேர் பாஜவுக்கு ரூ.42 கோடி கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த மர்மமான ரூ.42 கோடி வருமானம் குறித்து வருமான வரித்துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கான விதிமுறைப்படி, அவற்றை மீறியதற்காக பாஜவுக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. காங்கிரசுக்கு விதிக்கப்படும் விதிமுறைகள், பாஜவுக்கு மட்டும் பொருந்தாதது ஏன்? நாங்கள் இரட்டை பலத்துடன் போராடுவோம். பாஜவின் ஜனநாயக விரோத திட்டங்களை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு கூறி உள்ளார்.

The post ஐடி நோட்டீஸ் ஒருதலைப் பட்சமானது பாஜவுக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதிக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : BJP ,Priyanka Gandhi ,New Delhi ,Congress ,General Secretary ,Dinakaran ,
× RELATED தேவகவுடா பேரன் மீதான பாலியல் புகாரில்...